தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அதிமுக கட்சியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.
இந்தச் சூழலில் ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்ததும், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ஓபிஎஸ் அணியினர் கோரிக்கை வைத்தனர். சசிகலா அணி சார்பிலும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இரு அணியினரும் நேற்று டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா தேர் தல் ஆணையத்தின் முன் நேரில் ஆஜராகி இரட்டை இலை சின்னத்தை உரிமை கோர தன்னை 2 நாள் பரோலில் விடுவிக் கும்படி விண்ணப்பித்ததாக தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பாக பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையின் கூடுதல் டிஐஜி ஜெயராமையாவிடம் கேட்ட போது, ‘‘சசிகலா பரோல் கேட்கவில்லை. கர்நாடக சிறைத் துறை விதிமுறைகளின்படி குற்றவியல் வழக்குகளில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.
அதன்பிறகே பரோல் வழங்கப்படும்.மிகவும் அவசரத் தேவையென்றால் நீதிமன்றம் மூலம் பரோலில் செல்ல விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். அதன் பிறகே பரோலில் செல்ல முடியும். இதே போல சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றக்கோரியும் அவர் தரப்பில் இருந்து எவ்வித கோரிக்கையும் வைக்கப்படவில்லை’’ என்றார்.