இந்தியா

அமெரிக்கத் தூதரின் நேபாள பயணம் ரத்து

செய்திப்பிரிவு

நியூயார்க்கில் இந்திய தூதரக அதிகாரி தேவயானிக்கு நேர்ந்த அவமானத்தை அடுத்து இந்தியா எடுத்த கடுமையான பதில் நடவடிக்கைகள் காரணமாக தனது நேபாள பயணத்தை அமெரிக்க தூதர் நான்சி பாவெல் கைவிட்டார்.

விசா மோசடி புகாரை அடுத்து தேவயானி கைது செய்யப்பட்டுகைவிலங்கிடப்பட்டதுடன், ஆடைகள் களையப்பட்டு சோதனையிடப்பட்டார். இதனால் அவமானம் அடைந்த இந்தியா அதைத் துடைக்க அமெரிக்க தூதர்களுக்கு வழங்கி வந்த சிறப்பு சலுகைகளை விலக்கிக்கொண்டது.

விமான நிலைய அனுமதி அட்டை வாபஸ் பெறப்பட்டது. இந்த அட்டை இருந்ததால் விமான நிலையத்தில் நடைமுறையில் இருக்கும் சோதனைகளுக்கு சிறப்பு அனுமதி கிடைத்து வந்தது.

தனது நேபாள பயணத்திட்டம் பற்றி ஏற்கெனவே வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்த பாவெல், சிறப்பு அனுமதி வசதி உள்ளதா என்பதை கேட்டார். ஆனால் அந்த வசதி டிசம்பர் 19ம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படவே பயணத்தை கைவிட்டார். சிறப்பு பாஸ்களை ஒப்படைக்க 19ம்தேதிதான் கடைசியாகும்.

சிறப்பு அனுமதி வாபஸ் பெறப்பட்டு விட்டதால், அமெரிக்கத் தூதர் சோதனையிடப்படுவார். மேலும் சாதாரண பயணிக்கு எப்படியோ அதுபோல் பிற பாதுகாப்பு சோதனைகளுக்கும் உள்ளாகவேண்டும். அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது போலவே இந்தியாவும் இவ்வாறு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கான இந்திய தூதர் அந்நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும்போது அவர்களுக்கு சிறப்பு சலுகை கிடைப்பதில்லை.

2010ல் முன்னாள் தூதர் மீரா சங்கர், மிசிசிபி விமானநிலையம் சென்றபோது பாதுகாப்பு கோடு பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பு அமைப்புகளால் சோதனையிடப்பட்டதை அதிகார வட்டாரங்கள் உதாரணத்துக்கு குறிப்பிட்டன.

இதனிடையே, அமெரிக்க தூதரகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள், அவர்கள் குடும்பத்தவர் பணிக்கு அமர்த்தியுள்ள வீட்டுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதிய விவரத்தை தரும்படி இந்தியா கேட்டுள்ளபோதும் அதை கொடுக்காமல் அமெரிக்கத் தூதரகம் தாமதப்படுத்தி வருகிறது. -பிடிஐ

SCROLL FOR NEXT