இந்தியா

சட்டப் பேரவை, மக்களவைக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த தயார்: இந்திய தேர்தல் ஆணையர் தகவல்

பிடிஐ

இந்தியாவில் மாநில சட்டப்பேரவைகள் மற்றும் நாடாளுமன்றத்துக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது என தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையம் சார்பில், சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 19 நாடுகளின் தேர்தல் ஆணையர்கள் இதில் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க ஆஸ்திரேலியா வந்துள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி கூறியதாவது:

சட்டப்பேரவை மற்றும் மக்களவைக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தலாம் என சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளோம். ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதற்கு, போக்குவரத்து ஏற்பாடுகள், கூடுதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், தற்காலகி பணியாளர்கள், தேர்தல் தேதிகளை முறைப்படுத்தி அறிவித்தல் போன்ற ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கும்.

இவ்விவகாரத்தைப் பரிசீலித்து வரும் நாடாளுமன்ற குழுவுக்கு நாங்கள் பரிந்துரைகளை அனுப்பியுள்ளோம். தவிர, ஆலோசனைகளையும் அளித்துள்ளோம். இந்த யோசனைக்கு சில மாநிலங்கள் வரவேற்பும், சில ஆட்சேபமும் தெரிவித்துள்ளன. சட்டத் திருத்தம் மேற்கொண்டாக வேண்டும். எனவே, அரசியல் கட்சிகளிடையே பெருமளவு விவாதம் நடத்தப்பட வேண்டும்.

அரசியல் கட்சிகளின் ஏகமனதான முடிவும், சட்டத் திருத்தமும் இருந்தால்தான் ஒரே சமயத்தில் தேர்தலை நடத்த முடியும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்தலில் வாக்களிக்க இந்தியா வருவது குறித்து ஆன்லைனில் பதிவு செய்வதை ஊக்குவிக்கிறோம்.

ஆஸ்திரேலிய நடைமுறைப்படி தபால் வாக்குகளை பல்வேறு தரப்புகளுக்கு விரிவுபடுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT