யூகித்ததே நடந்துள்ளது. உலகின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான, மைக்ரோசாப்ட்டின் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) இந்தியாவைச் சேர்ந்த சத்யா நாதெள்ளா (46) நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். இவரது, தந்தையார் பி.எஸ். யுகந்தர், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி. பிரதமரின் தனி செயலாளராக பணியாற்றி உள்ளார். மத்திய திட்ட குழுவில் உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார்.
மல்லனூரு மண்டலம் புக்காபுரம் என்கிற குக்கிராமத்தில் பிறந்தவர் நாதெள்ள சத்யா என்கிற சத்யா நாதெள்ளா. சிறு வயது முதலே படிப்பில் படு சுட்டியாக விளங்கினார். பள்ளி பருவத்தை ஹைதராபாத்தில் கழித்தார். அங்குள்ள பேகம்பேட், ஹைதராபாத் பப்ளிக் உயர்நிலை பள்ளியில் படித்தார். படிக்கும் பொது, கிரிக்கெட்டில் அதிக ஈடுபாடு கொண்டிருந்ததாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். முதலில் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற நாதெள்ளா, தகவல் தொழில்நுட்ப கல்வியில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். ஆதலால், கர்நாடக மாநிலத்தில் மணிபால் பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்வியை விருப்பத்துடன் படித்தார்.
பிறகு, எம்.எஸ்., எம்.பி.ஏ. போன்ற உயர் கல்வியை அமெரிக்காவில் படித்து, தனது அறிவையும் ஆற்றலையும் வளர்த்துகொண்டார். தொடர்ந்து வாழ்வில், முன்னேற்ற பாதையில் பயணிக்க தொடங்கினார். இப்போது, மைக்ரோசாப்ட்டின் முதன்மைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
நாதெள்ளாவுக்கு, அனுபமா என்கிற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களுடன் ஆண்டுக்கு ஒரு முறை ஹைதராபாத் வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால், இம்முறை இவர் ஹைதராபாத் வரும்போது, பள்ளி நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளனர்.