மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி, இமாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் பி.கே.துமல், அவரின் மகன் அருண் துமல், பாஜக எம்.பி. அனுராக் தாகுர் ஆகியோர் மீது இமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை வியாழக் கிழமை விசாரித்த சிம்லா நீதிமன்றம், விசாரணையை பிப்ரவரி 15-ம் தேதி மேற்கொள் வதாக அறிவித்துள்ளது. நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்து வீரபத்ர சிங் கூறியதாவது:
“துமல் உள்ளிட்டோர் என்னை அரசியல் ரீதியாக பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். நான் முதல்வர் பதவிக்கு வந்தபோது, முந்தைய முதல்வரான துமல் மீதும், மற்ற பாஜக தலைவர்கள் மீதும் ஏராளமான புகார்கள் வந்தன. ஆனால், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொள்ள நான் விரும் பவில்லை. அதுபோன்று செயல் பட்டு இமாசலப் பிரதேசத்தை இன்னொரு பஞ்சாபாகவோ, தமிழ்நாடாகவோ மாற்ற எனக்கு விருப்பமில்லை. அதனால், பாஜக தலைவர்கள் மீது வழக்கு எதையும் நான் பதிவு செய்ய உத்தரவிடவில்லை.
அருண் ஜேட்லி, துமல் உள்ளிட்டோர் என் மீது அவதூறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதை தைரியமாக எதிர்கொள்வேன். சட்டத்தின் ஆட்சி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.
தங்களின் ஆட்சியில் நிகழ்ந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதால், துமலும், அவரின் குடும்பத்தினரும் அச்சத்தில் உள்ளனர்” என்றார்.
முன்னதாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அருண் ஜேட்லி எழுதியிருந்த கடிதத்தில், “தனியார் மின் உற்பத்தி நிறுவனத்திடமிருந்து வீரபத்ர சிங் லஞ்சம் வாங்கியுள்ளார். அது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த புகாரை மறுத்த வீரபத்ர சிங், அருண் ஜேட்லி மீது அவதூறு வழக்கு தொடருவேன் என்று தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த ஜேட்லி, “அவ்வாறு வீரபத்ர சிங் வழக்கு தொடர்ந்தால், அவரிடம் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடத்துவேன்” என்று தெரிவித்திருந்தார்.