இந்தியா

காதி நாட்காட்டியில் காந்தி படம் புறக்கணிப்பு: எதிர்க்கட்சிகள் தேவையற்ற சர்ச்சையை கிளப்புவதாக மத்திய அரசு குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

2017-ம் ஆண்டுக்கான காதி நாட்காட்டி மற்றும் நாட்குறிப்புகளில் மகாத்மா காந்திக்கு பதிலாக பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெற்றிருப்பதாக எழுந்துள்ள சர்ச்சைகள் தேவையற்றவை என மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது.

காதி கிராமத் தொழில் ஆணையத்தின் (கேவிஐசி) நாட்காட்டிகள் வெளியாவது இது முதல்முறையல்ல. மேலும், காதி நாட்காட்டிகளில் மகாத்மா காந்தியின் படம்தான் இடம்பெற வேண்டும் என எந்த விதியும் இல்லை என, கேவிஐசி தலைவர் வி.கே.சக்ஸேனா கூறினார்.

காதி கிராமத் தொழில் ஆணையத்தின் 2017-ம் ஆண்டுக்கான நாட்காட்டி (காலண்டர்) மற்றும் நாட்குறிப்பு (டைரி) அண்மையில் வெளியிடப்பட்டது. அவற்றின் முகப்புப் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி கைராட்டையுடன் காட்சியளிக்கும் படம் இடம்பெற்றிருந்தது.

வெற்றுடம்பில் இடுப்புக் கச்சை மட்டுமே அணிந்த படி கைராட்டையில் மகாத்மா காந்தி நூல் நூற்கும் புகழ்பெற்ற படத்தைப் போலவே, மோடியின் படமும் அமைந்திருந்தது.

காதி நாட்காட்டிகளில் காந்தியின் படத்தை அகற்றிவிட்டு, பிரதமர் நரேந்திர மோடியின் படம் திணிக்கப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியும், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தியாவின் மங்கள்யான் சாதனையை தனதாக்கிக் கொண்டதைப் போலவே, இதிலும் பிரதமர் மோடி முன்னிலைப்படுத்தப்படுகிறார் என, ராகுல்காந்தி விமர்சித்தார். காதி ஊழியர் அமைப்பினர் சிலரும் இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், இது தேவையில்லாத சர்ச்சை என்றே மத்திய அரசு கருதுகிறது. கடந்த, 1996, 2002, 2005, 2011, 2012, 2013, 2016 ஆகிய ஆண்டுகளில் வெளியான நாட்காட்டிகளிலும் காந்தியின் படம் இடம்பெறவில்லை. எனவே, காந்தியின் படம் அகற்றப்படுவதாகக் கூறுவது அபத்தம் என, காதி அமைப்பைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சர்ச்சைகளுக்கு பதில் அளித்த காதி கிராமத் தொழில் ஆணையத் தலைவர் வி.கே.சக்ஸேனா, ‘காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக் காலங்களில் காதி விற்பனை 2 முதல் 7 சதவீதம் மட்டுமே உயர்வைக் கண்டது. பாஜக ஆட்சிப்பொறுப்புக்கு வந்த பிறகு, காதி விற்பனை 34 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. சாதாரண விஷயங்களை பெரிதுபடுத்துவோர் இதனை கவனிப்பதில்லை.

மேலும், நாட்காட்டிகளில் மகாத்மா காந்தியின் படம் மட்டுமே இடம்பெறவேண்டும் என்று எந்த சட்ட விதிகளும் இல்லை. அதுமட்டுமின்றி, காந்திக்கு மாற்றாக வேறு யாரையாவது முன்னிறுத்துவது சாத்தியமா? எனவே, இந்த சர்ச்சைகள் தேவையற்றவை’ எனக் கூறினார்.

மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா கூறும்போது, ‘மகாத்மா காந்தி ஈடு இணையற்றவர். யாராலும் அவரின் இடத்தை நிரப்ப முடியாது. காதியின் மாதாந்திர நாட்காட்டியில் ஒரே பக்கம் மட்டும், அதுவும் முகப்புப் பக்கத்தில் பிரதமரின் படம் இடம் பெற்றிருக்கிறது. அதற்காக, காந்தியை புறக்கணித்துவிட்டு, பிரதமர் மோடியின் படத்தை அச்சிட்டிருப்பதாக கூறமுடியாது’ என்றார்.

SCROLL FOR NEXT