தெலங்கானா தலைநகர் ஹைதரா பாத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் விடிய விடிய பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது.
ஹைதராபாத் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் விடிய விடிய மழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக தாழ் வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. பிரதான சாலைகளிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்கு வரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய ஏரிகளில் அபாய கட் டத்தை தாண்டி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத் துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
கனமழையைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், அலுவலங் களும் மூடப்பட்டுள்ளன. இதற் கிடையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும்படியும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிடும்படியும் மாவட்ட நிர்வாகத்துக்கு மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.