ஆருஷி மற்றும் ஹேமராஜ் இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிகளான தல்வார் தம்பதிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதை, காஜியாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷியாம் லால் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
அவர் தனது தீர்ப்பில், குற்றவாளிகளான ராஜேஷ் தல்வார் மற்றும் அவரது மனைவி நுபுர் தல்வார் ஆகிய இருவருக்கும் ஐபிசி 302 பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை அளிப்பதாக அறிவித்தார். பிரிவு 201-ல் ஐந்து வருடம் மற்றும் பிரிவு 34-ன் கீழ் இரண்டு வருட சிறைத்தண்டனையும் வழங்கப்படுவதாக கூறினார். வழக்கைத் திசை திருப்ப முயன்றதாக ராஜேஷ் தல்வார் மீது கூடுதலாகப் பதிவான பிரிவு 203க்காக ஒரு வருடம் சிறைத்தண்டனையும் அளிக்கப்பட்டது.
சிபிஐ வாதம்
முன்னதாக சிபிஐ வழக்கறிஞர்கள் தம் தரப்பு வாதத்தில் தல்வார் தம்பதி செய்த கொலையை அரிதிலும் அரிதாகக் கருதி மரண தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டனர். இதன் மீது எதிர்வாதம் செய்த தல்வார் தரப்பு வழக்கறிஞர்கள், இருவர் மீதும் நேரடி ஆதாரங்கள் இல்லை என்பதால், குற்றவாளிகள் மீது கருணை காட்டப்பட வேண்டும் எனக் கூறினர். இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, தல்வார் தம்பதிக்கு ஆயுள் தண்டனை வழங்கினார். அத்துடன், தல்வார் தம்பதிக்கு அபராதமும் அறிவித்தார்.
இதுகுறித்து சிபிஐ வழக்கறிஞரான ஆர்.கே.சைனி கூறுகையில், ‘தாம் பெற்ற செல்ல மகள் என்றும் பாராமல் செய்யப்பட்ட கொலை அரிதினும் அரிதான பிரிவில் வருவதால், குற்றவாளிகளை தூக்கிலிடக் கோரினோம். ஆனால், குற்றம் நடந்த சூழ்நிலை, ஆதாரங்களின் அடிப்படையில் இருவர் மீதும் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால், தூக்கு தண்டனை மறுக்கப்பட்டது’ எனத் தெரிவித்தார்.
மேல்முறையீடு
இந்நிலையில், தல்வாரின் வழக்கறிஞர் ரிபேக்கா ஜான் கூறுகையில், ‘ஆதாரங்கள் இல்லை என்பதால் வழக்கை மூடி விட வேண்டும் எனக் கூறியவர்கள், பாதிக்கப்பட்டவர்களை தூக்கிலிட வேண்டும் எனக் கேட்டது அதிர்ச்சியாக உள்ளது. இந்த வழக்கில் தல்வார் தம்பதிக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதற்கு பல புதிய ஆதாரங்கள் உள்ளன. அதை கூற வேண்டிய சமயம் அல்ல இது. இருப்பினும் நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம். இதற்கு எங்களிடம் மேலும் சில வாய்ப்புகள் உள்ளன. முழு தீர்ப்பு விவரம் வந்த உடன் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்’ எனத் தெரிவித்தார்.
வழக்கின் போக்கு
உ.பி. மாநிலம் நொய்டாவின் மருத்துவத் தம்பதியான ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார் மீது தம் ஒரே மகளான 14 வயது ஆரூஷி மற்றும் வேலைக்காரர் ஹேமராஜை கொலை செய்ததாக சிபிஐ குற்றம் சாட்டியது. கடந்த மே 15, 2008-ன் நள்ளிரவில் நடந்த இந்த இரட்டைக் கொலையை உ.பி. போலீஸ் சரியாக விசாரிக்கவில்லை என இவ்வழக்கு ஜூன் 1, 2008-ல் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.
இரண்டு வருடம், 9 மாத விசாரணைக்கு பின் காஜியாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம், பெற்றோரே குற்றவாளிகள் என தனது தீர்ப்பை திங்கள்கிழமை வழங்கியது.
இதையடுத்து தாஸ்னா சிறையில் அடைக்கப்பட்ட இருவரில், நுபுர் தல்வாருக்கு அன்றைய தினம் இரவு, உடல்நிலை கவலைக்கிடமானது. பிறகு உடனடியாக மருத்துவர் வரவழைக்கப்பட்டு இருவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. நுபுரின் ரத்த அழுத்தம் அதிகமானதால் அவரது உடல்நலம் அதிகமாகக் குன்றியதாகவும், இதற்காக நன்கு ஓய்வு எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டு மருந்துகள் அளிக்கப்பட்டன.
இரவு முழுவதும் அழுதார்கள்
தாஸ்னா சிறை அதிகாரி வீரேஷ்ராஜ் சர்மா கூறுகையில், ‘இருவரும் இரவு உணவு எடுத்துக் கொள்ளவில்லை. எவ்வளவு எடுத்து சொல்லியும் இரவு முழுவதும் அழுது கொண்டே இருந்தனர்’ எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே, தல்வார் தம்பதி கவுரவக் கொலையாக இதை செய்திருக்கலாம் என கருத்துகள் வெளியாகத் தொடங்கி உள்ளன. வட இந்தியாவில் தொடங்கி கிராமங்களில் மட்டும் இருந்து வந்த இந்த கவுரவக் கொலை தற்போது நகரங்களிலும் பரவி விட்டதாக கருதப்படுகிறது.