மத்தியப் பிரதேச மாநிலத்தில் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தையை 22 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு சடலமாக மீட்டது மீட்புக் குழு.
குவாலியர் மாவட்டம், சுல்தான்பூர் கேரியா கிராமத்தைச் சேர்ந்த அபய் பச்சோரி (3), அவனது மூத்த சகோதரி மற்றும் பாட்டி ஆகியோர் நேற்று முன்தினம் வயலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி உள்ளனர். அப்போது, அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் அபய் தவறி விழுந்துள்ளான்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல் துறை, எல்லை பாதுகாப்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அடங்கிய குழு சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டது.
இதுகுறித்து குவாலியர் காவல் துறை ஐஜி ஆதர்ஷ் கட்டியார் கூறும்போது, “விவசாய நிலத்தில் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை, 25 அடி ஆழத்தில் சிக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் மீட்புக் குழுவினர் பள்ளம் தோண்டினர். 22 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்ட அந்தக் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்” என்றார்.
இதனிடையே, குழந்தை சிக்கிக் கொண்ட இடத்தில் பாம்பு ஒன்று இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாம்பு கடித்து குழந்தை இறந்திருக்கலாம் என தகவல் பரவியது.
இதுகுறித்து குவாலியர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சஞ்சய் கோயல் கூறும்போது, “குழந்தையின் உடலை முதல்கட்டமாக பரிசோதனை செய்ததில் பாம்பு கடித்ததற்கான தடயம் எதுவும் தென்படவில்லை. மூச்சுத் திணறல் ஏற்பட்டதாலேயே குழந்தை இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே இதற்கான காரணம் தெரியவரும். இறந்த குழந்தையின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியி லிருந்து ரூ.1 லட்சம் வழங்கப்படும்” என்றார்.