ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி மீது பாலியல் புகார் கூறிய பயிற்சி வழக்கறிஞருக்கு கடிதம் எழுதியுள்ள டெல்லி போலீஸ், அவரை நேரில் சந்திக்க அனுமதி கோரியுள்ளது. கடிதத்தில், நீதிபதி மீதான புகார் குறித்து விசாரிக்க விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று, நீதிபதி ஏ.கே.கங்குலி மீதான பெண் பயிற்சி வழக்குரைஞரின் பாலியல் புகாரில் போதிய முகாந்திரம் இருப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட நிலையில் டெல்லி போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அறிக்கை விபரம்:
'குறிப்பிட்ட நாளில் அந்த பெண், நீதிபதி தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குச் சென்றது உண்மை. இதை ஏ.கே. கங்குலியும் மறுக்கவில்லை. பெண் வழக்கறிஞர், சாட்சிகள், கே. கங்குலியின் ஆகியோரின் வாக்குமூலங்களை ஆராய்ந்ததில் அந்தப் பெண்ணிடம் ஏ.கே. கங்குலி பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டற்கான முகாந்திரம் உள்ளது தெரியவருகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலுக்கும் எதிர்ப்பு:
பாலியல் புகாரைத் தொடர்ந்து, தற்போது மேற்கு வங்க மாநில மனித உரிமை ஆணையத் தலைவராக உள்ள ஏ.கே. கங்குலி தனது பதவியை உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.