இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு அதிமுக (அம்மா) சார்பில் ரூ.50 கோடி பேரம் பேசியதாக டிடிவி தினகரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி ஹோட்டலில் ரூ.1.3 கோடியுடன் சிக்கிய ஒருவரின் வாக்குமூலத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் மத்திய பகுதி யிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் நள்ளிரவு அம்மாநில போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். இதில் ரூ.1.3 கோடியுடன் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் சிக்கினார். அவரது இரு சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சுகேஷிடம் குற்றப்பிரிவு துணை ஆணையர் மதூர் வர்மா தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது சுகேஷ், இரட்டை இலை சின்னம் பெற்றுத்தர அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் இதில் ஒரு தொகையை தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சமாக அளிக்கவிருந்ததாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து மதூர் வர்மா நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “எங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஒரு ஹோட்டலில் சோதனை நடத்தினோம். அங்கு ரூ.1.3 கோடியுடன் சிக்கிய சுகேஷ் சந்திரசேகரிடம் விசாரணை நடத்தினோம். அதிமுகவின் சசிகலா அணிக்கு சாதகமான உத்தரவை தேர்தல் ஆணையத்திடம் பெற்றுத் தருவதாக அந்த அணியை சேர்ந்த டிடிவி தினகரனிடம் உறுதி அளித்து ரூ.50 கோடி பேரம் பேசியதாக சுகேஷ் கூறினார். இதில் முன்பணமாக பெற்ற தொகையில் ரூ.1.3 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுகேஷ் மீது லஞ்ச தடுப்பு பிரிவு 8, ஐபிசி 170 மற்றும் 120 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்றார்.
இந்நிலையில் டெல்லி நீதி மன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப் படுத்த சுகேஷை 8 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.
தினகரனும் கைதாக வாய்ப்பு
சுகேஷிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கார்களில் ஒன்று ராஜஸ்தான் பதிவு எண்ணுடன் இருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மற்றொரு காரில் இமாச்சலபிரதேச பதிவு எண் இருந்தது. சுகேஷிடம் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தினகரன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தினகரனிடம் விசாரிக்க டெல்லி தனிப்படை போலீஸார் எந்நேரமும் சென்னை செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு தினகரன் கைது செய்யப் படவும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி போலீஸ் வட்டாரத்தில் கூறும்போது, “இந்த பேரம் தொடர்பாக தினகரனிடம் சுமார் 40 நிமிடம் சுகேஷ் போனில் பேசிய பதிவு அவரது மொபைலில் இருந்து கிடைத்துள்ளது. சுகேஷுக்கு ஹவாலா முறையில் ரூ.20 கோடி கைமாற்றப்பட்டதற்கான ஆதாரமும் கிடைத்துள்ளது. சுகேஷ் மற்றும் தினகரனிடம் விசாரணை நடத்தப்பட்டு அதன் மீதான அறிக்கை தேர்தல் ஆணையம் மற்றும் அமலாக்கத் துறைக்கு அனுப்பி வைக்கப்படும்” என்று தெரிவித்தனர்.
இந்த வழக்கில் இதுவரை தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடத்தப்படவில்லை. ஆனால், டெல்லி போலீஸாரின் அறிக்கை கிடைத்த பிறகு தேர்தல் ஆணையம் சார்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது. தேர்தல் ஆணைய விதிகளின்படி, ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயற்சிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவு ரத்தாக வாய்ப்புள்ளது. போலீஸாரின் அறிக்கை கிடைத்த பிறகு, அமலாக்கத் துறையும் டிடிவி தினகரன் மீது தனியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யார் அந்த சுகேஷ்?
செல்வந்தர்கள், முக்கியப் புள்ளிகள் மற்றும் அரசியல்வாதி களை ஏமாற்றி பலகோடி பணம் சுருட்டும் பழக்கம் கொண்டவர் சுகேஷ். இதற்காக தன்னை முக்கியப்புள்ளி அல்லது அரசு அதிகாரி அல்லது பெரிய அரசியல்வாதியின் உறவினர் என்று கூறிக்கொள்வார். இத்துடன் தான் ஏமாற்றி சம்பாதித்த பணத்தில் ஆடம்பரமாக செலவு செய்யும் பழக்கம் உள்ளவர்.
எந்நேரமும் விலை உயர்ந்த சொகுசு கார்களை தன்னுடன் வைத்திருப்பார். பாலிவுட் பிரபலங்களை போல் தனியார் பாதுகாவலர்களையும் தனது பாதுகாப்புக்கு அமர்த்திக் கொள்வார். இதன்மூலம் சினிமா பிரபலங்களையும் வளைக்க முயலும் சுகேஷ், சில வருடங் களுக்கு முன் லீனா மரியா பால் என்ற நடிகையையும் ஏமாற்றினார். சுகேஷிடம் ஏமாந்தாலும் அவரிடம் இருக்கும் பணம் காரணமாக, அவருக்கு நெருக்கமானவராக லீனா மாறிவிட்டார்.
கேரளாவின் பிரபல நடிகையான லீனா ‘மெட்ராஸ் கபே’ என்ற படத்தில் நடித்தமைக்காக தேசிய விருது பெற்றவர். கடந்த 2013-ல் சென்னை அம்பத்தூர் கனரா வங்கியில் சுகேஷ் ரூ.19 கோடி மோசடி செய்ததாகப் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடைசியாக கடந்த 2015, ஜூனில் லீனாவுடன் இணைந்து சுகேஷ் மும்பையில் பலரிடம் ஆசை வார்த்தை கூறி பல கோடி ரூபாய் பெற்றுள்ளார். பத்து மடங்காக மாற்றித் தருவதாக கூறி மோசடி செய்த இருவரும் போலீஸாரிடம் சிக்கினர். இது உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சுகேஷ் மீது சுமார் 60 வழக்குகள் உள்ளதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. இவற்றில் சில வழக்குகளில் ஜாமீன் பெற்ற சுகேஷ், பல வழக்குகளில் இன்னும் பிடிபடாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.