நீதிபதி ஜெ.எஸ்.வர்மாவுக்கு அளிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதை ஏற்க மறுத்துள்ள அவரது மனைவி, அதற்கான காரணத்தை குடியரசு தலைவருக்கு கடிதம் மூலம் விளக்கியுள்ளார்.
2012 டிசம்பர் 16-ஆம் தேதி, டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் பலியானார்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்துக்குப் பிறகு, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக சட்டரீதியான பரிந்துரைகளை வழங்க அமைக்கப்பட்ட குழு தலைவராக இருந்தார். வர்மா குழு பரிந்துரைகள் பெண்கள் மத்தியில் பலத்த வரவேற்பையும், ஆதரவையும் பெற்றது.
நீதிபதி வர்மாவின் சேவைகளை கெளரவித்து, பத்ம பூஷண் விருதுக்காக அவரது மறைவுக்குப் பின் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில்,அவரது மனைவி புஷ்பா, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.
விருதை பெற்றுக் கொள்வது தன் கணவரின் கொள்கைக்கு எதிரானதாக அமையும், அவர் எப்போதும் எந்த விதமான கெளரவ அடையாளங்களை விரும்பியதில்லை என புஷ்பா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "நாட்டு மக்கள் அனைவர் மனதிலும் அவர் பிடித்துள்ள இடமே அவருக்குக் கிடைக்கக் கூடிய கெளரவம் ஆகும்.
பெயர், புகழ், விருது இவற்றின் பின்னால் எப்போதும் அவர் சென்றதில்லை. எனவே, நீதிபதி வர்மா உயிரோடு இருந்திருந்தால் எதை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டாரோ, அதை அவர் மறவுக்குப் பின்னாலும் நாங்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.
தனி நபர் ஆதாயத்தைக் காட்டிலும் அவருக்கு இந்திய தேசமே முதன்மையாக இருந்தது. அநீதியை வேரறுக்க அவர் உலகம் போற்றிய பல நீதிமுறைகளை கையாண்டிருக்கிறார். அதற்காக, இந்தியாவின் தலை சிறந்த நீதிபதிகளில் ஒருவராக அவர் எப்போதுமே நினைவுகூரப்படுவார். இதுவே அவருக்கு கிடைக்கும் மிகப் பெரிய கெளரவம்" என்று நீதிபதி வர்மா மனைவி குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.