இந்தியா

தேஜ்பால் வியாழன் பிற்பகல் ஆஜராக கோவா போலீஸ் சம்மன்

செய்திப்பிரிவு

பாலியல் புகாரில் சிக்கியுள்ள தெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால் நாளை (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டும் என கோவா காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இதனிடையே, தருண் தேஜ்பால் முன் ஜாமீன் மனு மீதான உத்தரவை, நவம்பர் 29 வரை நிறுத்திவைத்தது டெல்லி உயர் நீதிமன்றம். இதனால், அவரது கைதுக்கு இடைக்காலத் தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் தற்காலிகமாக மறுத்துள்ளது.

தன்னுடன் பணிபுரிந்த பெண் பத்திரிகையாளரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, தருண் தேஜ்பால் மீது கோவா குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக, அந்தப் பெண் பத்திரிகையாளரிடம் கோவா போலீஸார் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். அவர் முழு ஒத்துழைப்புடன் வாக்குமூலம் தந்ததாக போலீஸ் தரப்பு தெரிவித்தது.

முன்னதாக, தருண் தேஜ்பால் வெளிநாடு தப்பிச் சென்றுவிடாமல் இருக்கும் பொருட்டு அனைத்து குடியுரிமை சோதனைச்சாவடிகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்துள்ளது.

"அவர் வெளிநாடு செல்வதாக இருந்தால் அதுகுறித்து அவர் காவல்துறையிடம் கட்டாயம் தெரிவித்தாக வேண்டும்" என கோவா காவல்துறை டிஐஜி மிஸ்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தருண் தேஜ்பால் மீது கோவா காவல்துறை ஐபிசி 376, 376(2) மற்றும் 354 ஆகிய பிரிவுகளின் கீழ் கடந்த 22 ஆம் தேதி வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT