இந்தியா

கூட்டணியில் சேருமாறு கெஞ்சினார் முலாயம்: ஆர்எல்டி பொதுச்செயலர் ஜெயந்த் தகவல்

செய்திப்பிரிவு

சமாஜ்வாதி கூட்டணியில் ராஷ்ட்ரிய லோக் தளத்தை (ஆர்எல்டி) இணைக்க முலாயம் சிங் தொலைபேசியில் கெஞ்சினார். அந்தக் கூட்டணியில் ஆர்எல்டி சேராததால் கட்சி பலவீனம் அடைந்துவிடவில்லை என்று அதன் பொதுச்செயலர் ஜெயந்த் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் வரும் 11-ம் தேதி தொடங்கி மார்ச் 8-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆளும் சமாஜ்வாதி, காங்கிரஸ், ஆர்எல்டி இடையே கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் தொகுதி ஒதுக்கீடு பிரச்சினையால் ஆர்எல்டி கூட்டணியில் சேர்க்கப்படவில்லை.

இந்நிலையில் ஆர்எல்டி மதுரா தொகுதி வேட்பாளர் அசோக் அகர்வாலை ஆதரித்து மதுராவில் நேற்று பிரச்சார கூட்டம் நடந்தது. இதில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயந்த் சவுத்ரி பேசியதாவது: ஆர்எல்டி கட்சியை உடைக்க சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி எத்தனையோ முயற்சிகளை எடுத்தன. எனினும் கட்சி பலவீனம் அடைவதற்கு மாறாக வலுப் பெற்றுள்ளது.

சமாஜ்வாதியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுமாறு அதன் நிறுவனர் முலாயம் சிங் தொலைபேசியில் உதவி கேட்டு கெஞ்சினார். அதன் காரணமாகவே சமாஜ்வாதி கூட்டணியில் இணைய கட்சித் தலைவர் அஜித் சிங் முடிவு செய்தார்.

உத்தரப் பிரதேசத்துக்கு அகிலேஷ் எதுவும் செய்யவில்லை. லக்னோவில் 600 மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் இயக்குவதும் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதும் வளர்ச்சி அல்ல. குடும்பத்தினருடன் சண்டையிடுவது அகிலேஷ் யாதவின் வழக்கமாகிவிட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT