சிக்கலான பாதைகள் எதிரே உள்ள நிலையில், நாடு தேர்ந்தெடுக்கவிருக்கும் பாதை பிரிவினைவாதமா அல்லது நல்லிணக்கமா என்பதை பிஹார் பேரைவத் தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
பிஹார் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா தொடங்கினார். கஹல்கான் அருகே நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பிஹார் மக்களுக்கு மோடி தவறான தகவல்களை அளிக்க முயற்சி செய்கிறார். பிஹாருக்கு அவர் அறிவித்துள்ள சிறப்பு நிதி மோசடி வேலை. அதில் இருக்கும் உண்மை என்ன? முந்தைய அரசுகள் கொடுத்து வந்ததையே புதிய நிதி உதவியாகக் காட்டியிருக்கிறார். உங்களை ஏமாற்றுவதை அவர் சொல்லவில்லை.பிஹார் மக்கள் மதச்சார்பற்ற அணியை விரும்பு கிறீர்களா அல்லது நாட்டை பிளவு படுத்துவோரை தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களா?
இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆர்எஸ்எஸ்ஸுக்கும், பாஜகவுக்கும் இடையே மேட்ச் பிக்ஸிங் நடக்கிறது. எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி. பிரிவினருக்கு அரசியலமைப்பு அளிக்கும் இட ஒதுக்கீட்டில் காங்கிரஸ் உறுதியாக நிற்கிறது.
பாஜகவின் 15 மாத கால ஆட்சி, சில கார்ப்பரேட் நிறுவனங்களைத் தவிர வேறு யாருக்கும் பயனளிப்பதாக இல்லை. பாஜகவின் கொள்கைகள் நாட்டை பாதிப்பதை நீங்கள் அறிவீர்கள். வேலையின்மை அதிகரித்திருக்கிறது, மகளிருக்கான நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைந் திருக்கிறது, விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு குறைவான விலையைப் பெறுகிறார்கள்.
உங்களின் வலிமையைத் திரட்டி, நாட்டைத் துண்டாடும் சக்திகளையும், தவறான வாக்குறுதிகளை அளிப்பவர்களையும், பிஹாரின் பெருமையை சீர்குலைப்பவர்களையும் வீழ்த்துங்கள். தற்போதைய முதல்வர் நிதிஷ் குமார் கறைபடியாதவர். வெளி நாடுகளில் நேரத்தைச் செல விடாமல் மக்களுக்காக உள்ளூரிலேயே இருப்பவர்.
நம் எதிரே ஏராளமான பாதைகள் உள்ளன பிஹாரும், நாடும் செல்ல வேண்டிய பாதை பிரிவினைவாதமா அல்லது மத நல்லிணக்கமா என்பதை பிஹார் தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.