இந்தியா

மன்மோகன் பற்றி சர்ச்சைக்குரிய பேச்சு: மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி

பிடிஐ

‘‘முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி சர்ச்சைக்குரிய வகை யில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண் டும்’’ என்று கோரி மாநிலங்களவை யில் காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சி யினர் கடும் அமளியில் ஈடுபட்ட னர். இதனால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

பண மதிப்பு நீக்கம் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாடாளுமன்றத்தில் பேசும்போது, ‘இது சட்டப்பூர்வமான கொள்ளை’ என்று குறிப்பிட்டார். இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாநிலங்களவையில் பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, ‘‘குளியல் அறையில் மழைகோட்டு அணிந்துகொண்டு குளிக்கும் வித்தை அறிந்தவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். அவர் ஆட்சி காலத்தில்தான் நிலக்கரி ஊழல், 2ஜி ஊழல் போன்ற பல ஊழல்கள் நடந்தன. ஆனால், அவர்மீது எந்த கறையும் ஏற்பட வில்லை’’ என்று பேசினார். அதற்கு காங்கிரஸ் உட்பட எதிர் கட்சியினர் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.

இந்நிலையில் மாநிலங்களவை நேற்று கூடியதும், முன்னாள் பிரதமரை அவமானப்படுத்தும் வகையில் பேசிய மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் உறுப்பினர்கள் கூச்ச லிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐக்கிய ஜனதா தள உறுப்பினர்களும் கூச்சலிட்டனர். ‘‘பிரதமர் மோடி தரக்குறைவான, அவமானப்படுத் தும் வகையில் பேசியுள்ளார். பிரதமர் அல்லது அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசும் போது, அதற்கு விளக்கம் கேட்கும் உரிமை உறுப்பினர்களுக்கு உள்ளது. ஆனால், நாங்கள் விளக்கம் கேட்க வாய்ப்பு அளிக் கப்படவில்லை’’ என்று எதிர்க்கட்சி யினர் குற்றம் சாட்டினர்.

மார்க்சிஸ்ட் உறுப்பினர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா, ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் சரத்யாதவ் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஆளும் கட்சி உறுப்பினர்களும் பதில் அளிக்கும் வகையில் ஏதோ பேசினார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மைய பகுதிக்குச் சென்று மோடி மன்னிப்பு கேட்க கோரி கோஷ மிட்டனர். அப்போது, தமிழகத்தில் சசிகலாவுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைக்க கோரி அதிமுக உறுப்பினர்களும் கூச்சலிட்டனர். இதனால் அவையில் அமளி நிலவியது. இதையடுத்து அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி, அவையை ஒத்திவைத்தார்.

காங்கிரஸ் வெளிநடப்பு

மக்களவையிலும் மோடி மன்னிப்பு கேட்க கோரி காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் நேற்று பூஜ்ய நேரத்தின் போது, மோடியின் பேச்சு குறித்த பிரச்சினையை எழுப்ப நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முயற்சித்தார். ஆனால், ‘‘மாநிலங்களவையில் பேசப்பட்ட விவகாரத்தை மக்களவையில் எழுப்ப முடியாது’’ என்று கூறி அவர் பேசுவதற்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதி தர வில்லை. நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் ஆனந்த் குமாரும் அதே கருத்தை வெளியிட்டார்.

அதற்கு கார்கே கூறும் போது, ‘‘முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி பிரதமர் மோடி எந்த தவறான கருத்து கூறியிருந்தாலும் அது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு நல்லதல்ல’’ என்று தெரிவித்தார். இதையடுத்து காங்கிரஸ் எம்.பி.க் கள், சபாநாயகர் இருக்கைக்கு எதிரில் சென்று, மோடி மன்னிப்பு கேட்க கோரி அமளியில் ஈடு பட்டனர். அப்போது மக்களவை யில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமைதியாக அமர்ந்திருந்தார்.

இதனால் கோபம் அடைந்த சுமித்ரா மகாஜன், ‘‘பூஜ்ய நேரத்தில் மற்ற எம்.பி.க்கள் பேசும் உரிமையை காங்கிரஸ் எம்.பி.க்கள் பறிக்கின்றனர்’’ என்று கூறினார். அத்துடன் பூஜ்ய நேரத்தில் மற்ற எம்.பி.க்களை பேச அழைத்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT