இந்தியா

ஆம் ஆத்மி ஒரு சராசரி அரசியல் கட்சியே: முன்னாள் தலைவர் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

ஆம் ஆத்மி கட்சியும் சராசரி அரசியல் கட்சியைப் போன்றது தான், துடைப்பத்தைக் கொண்டு மக்கள் பிரச்சினைகளை அலங்கார விரிப்புகளுக்கு கீழே ஒதுக்கி வைக்கிறது என ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான மது பாதுரி தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி அண்மையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக நள்ளிரவில் மேற்கொண்ட ஆய்வுக்கு மது பாதுரி எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் கட்சியில் இருந்து விலகினார்.

இந்நிலையில் கட்சியின் செயல்பாடுகள் குறித்து பேசியுள்ள அவர்: "ஆம் ஆத்மி கட்சி உருவாக்கப்பட்ட போது நான் அதன் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தேன். அந்த மாயத்தோற்றம் இப்போது என்னை விட்டு விலகியது. ஆம் ஆத்மி கட்சிக்கு ஹரியானா தேர்தல் மீதும் மக்களவைத் தேர்தல் மீதும் தான் முழு கவனமும் உள்ளது. அவர்கள் மந்திரக்கோல் (ஆம் ஆத்மி கட்சியின் சின்னம் - துடைப்பம்) சமூகப் பிரச்சினையை சரி செய்யவில்லை, மாறாக அலங்கார விரிப்புகளுக்கு கீழ் பிரச்சினைகளை ஒதுக்கி வைத்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழுவில் ஒரு பெண் உறுப்பினர் கூட இல்லை, தேசிய செயற்குழுவில் சொற்ப அளவிலேயே உறுப்பினர்கள் உள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சிக்கு சமூக பிரச்சினைகள் கண்ணில் படுவதில்லை. மகளிருக்கான கொள்கைகள் அற்ற கட்சி அது" என கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், ஆப்பிரிக்க இளம் பெண்களிடம் கட்சி சார்பில் மன்னிப்பு கேட்க வேண்டும் என தான் தெரிவித்த போது, யோகேந்திர யாதவ் உள்பட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தன்னை கடுமையாக விமர்சித்ததாகவும் அது குறித்து பேசக்கூடாது என கட்டுப்பாடு விதித்ததாகவும் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT