இந்தியா

காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக் கொலை

பிடிஐ

காஷ்மீரில் சோபூர் மாவட்டத்தில் தீவிரவாதி ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "சோபூர் மாவட்டம் போமை கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தனர். அப்போது தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால், இதுவரை அவரது சடலம் கைப்பற்றப்படவில்லை. அப்பகுதியில் எத்தனை தீவிரவாதிகள் பதுங்கியிருக்கின்றனர் என்ற நிலவரம் முழுமையாக தெரியவில்லை.

இதற்கிடையில் போமை கிராமத்து இளைஞர்கள் தீவிரவாதிகளை காக்கும் வகையில் பாதுகாப்புப் படையினருக்கு இடையூறு ஏற்படுத்தினர். கற்களை வீசி தாக்கினர்.

பின்னர் இளைஞர்கள் சிலர் சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பாதுகாப்புப் படையினரால் தொடர்ந்து தீவிரவாதிகளை தாக்கும் பணியில் ஈடுபட முடியவில்லை.

நிலைமை கட்டுக்கடங்காமல் செல்லவே கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீஸார் கூட்டத்தை கலைத்தனர்" என்றார்.

4 நாட்களில் 6 தீவிரவாதிகள்:

காஷ்மீரில் கடந்த 4 நாட்களில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி வழியாக ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்களுடன் இதுவரை மொத்தம் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் ராணுவ தரப்பில் இருவர் வீர மரணம் அடைந்தனர்.

SCROLL FOR NEXT