பொது மேடைகளில் எல்லைக் கோட்டை தாண்டி பேசி, பிரச்சினைகளில் சிக்கவேண்டாம் என்று பாஜக எம்.பி.க்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் நேற்று பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பாஜக எம்.பி.க்கள் கூறும்போது, “எம்.பி.க்கள் மேடைகளில் பேசும்போது லஷ்மண் கோட்டை தாண்டக் கூடாது, சர்ச்சைக்குரிய கருத்துகளால் அரசுக்கும் கட்சிக்கும் களங்கம் ஏற்படுகிறது. இது, பொதுமக்களுக்கு அரசு செய்ய நினைக்கும் நல்ல விஷயங்களின் திசைகளையும் மாற்றி விட வாய்ப்புள்ளது என்று பிரதமர் எச்சரித்தார்” என்றனர்.
சமீப நாட்களாக, பாஜக எம்.பி.க்கள் வரம்பு மீறும் வகையில் மேடைகளில் பேசி சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் நடப்பு கூட்டத்தொடரில் அதிகம் எழுப்பப்பட்டு, மத்திய இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, எம்.பி. சாக் ஷி மஹராஜ் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டியதாயிற்று. இதற்கு முடிவு கட்டும் வகையில், கட்சி எம்.பி.க்களை மோடி எச்சரித்துள்ளார்.
வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்காக, அன்றைய தினம் சிறந்த நிர்வாக நாளாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை மக்களிடையே கொண்டு செல்வதற்கு கருத்தரங்குகள் மற்றும் விழிப்புணர்வுக் கூட்டங்களை அரசு நடத்த உள்ளது. இதை குறிப்பிட்டு பேசிய மோடி, அனைத்து எம்.பி.க்களும் தங்கள் தொகுதியில் இந்த நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
நாடாளுமன்றக் கூட்டம் முடிந்த பின், எம்.பி.க்கள் தங்கள் தொகுதிகளில் ரத்ததானம், இலவச உடல் மற்றும் கண் பரிசோதனை முகாம் உட்பட பல்வேறு முகாம்களை நடத்த வேண்டும் எனவும் ஏழைமக்கள் கடும் குளிரை சமாளிக்கும் வகையில் அவர்களுக்கு கம்பளி போன்ற அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக விநியோகிக்க வேண்டும் எனவும் மோடி கேட்டுக்கொண்டார்.
இதில், எம்.பி.க்களின் பணிகள் வெறும் பெயரளவில் என்றில்லாமல் வெளிப்படையாக மக்கள் பேசும் வகையில் இருக்கவேண்டும் எனவும் மோடி வலியுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, “இந்த கூட்டத்தொடரில் ஏற்கெனவே திட்டமிட்டபடி, நிலுவையில் உள்ள மசோதாக்களை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். எதிர்க்கட்சிகளின் நோக்கத்துக்கு துணை போகும்படி எம்.பி.க்கள் பேசக் கூடாது” என்றார்.
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஆரோகியமான விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. அவையை நடைபெறவிடாமல் முடக்கவே அவர்கள் விரும்பு கின்றனர்” என்றார்.