தீவிரவாதத்துக்கு உதவி செய்து வரும் நிலைப்பாட்டை பாகிஸ்தான் தொடர்ந்து கடைபிடித்து வந்தால், இந்தியா தனது கொள்கையை மாற்றுவது குறித்து ஆலோசிக்க நேரிடும் என தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு எச்சரித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி புர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொலை செய்ததை கண்டித்து மாநிலம் முழுவதும் வன்முறை, கலவரம் வெடித்துள்ளது. இதைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றத்துக்கு பாகிஸ்தான் தான் காரணம் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நேற்று அவர் கூறியதாவது:
பயிற்சி, நிதியுதவி, ஆதரவு என தீவிரவாதிகளுக்கு அளித்து வரும் உதவிகளை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும். இரு நாட்டின் நலனுக்காக பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்ற பிரதமர் மோடி விரும்புகிறார். ஆனால் பாகிஸ்தான் இதை புரிந்து கொள்ளாமல் தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், இந்தியா தனது கொள்கையை மாற்றிக்கொள்ள நேரிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதே சமயம் ஹிஸ்புல் தளபதி புர்ஹான் கொல்லப்பட்டதை கண் டித்து பாகிஸ்தான் அரசு நேற்று அறிக்கை வெளியிட்டது. அதில், ‘‘இந்தியா ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதியில், அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவது மிகவும் கண்டனத்துக்குரியது. ஜ.நா. வின் ஆதரவுடன் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண் டும். பிரிவினைவாத தலைவர்கள் கைது செய்யப்படுவதும் கண்டித் தக்கது. காஷ்மீரில் மனித உரிமையை நிலைநாட்ட இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என குறிப்பிடப் பட்டுள்ளது.