இந்தியா

நான் இந்தியன்... அரசமைப்புச் சட்டம் மீது முழு நம்பிக்கை உள்ளது: கண்ணய்ய குமார்

பிடிஐ

தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட ஜே.என்.யூ. மாணவர் தலைவர் கண்ணய்ய குமார், "நான் ஒரு இந்தியன். நீதித்துறை மற்றும் அரசைப்புச் சட்டம் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது" என்று நீதிமன்றத்தில் கூறினார்.

ஜே.என்.யூ. விவகாரத்தில் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்பு, நீதிபதி லவ்லீன் முன்னிலையில் கண்ணய்ய குமார் கூறும்போது, “நான் முன்பே கூறியுள்ளேன், நான் ஒரு இந்தியன், எனக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் மீதும், நீதித்துறை மீதும் மிகுந்த நம்பிக்கை உள்ளது.

எனக்கு எதிரான விசாரணை வலி நிறைந்ததாக உள்ளது. நான் தேசவிரோதி என்பதை நிரூபிக்க சாட்சி இருந்தால், என்னை சிறையில் தள்ளுங்கள். சாட்சி இல்லை எனில் விசாரணை இருக்கக் கூடாது” என்றார்.

இதற்கிடையே கண்ணய்ய குமார் ஜாமீனுக்கு மனு செய்தால் அதனை டெல்லி போலீஸ் ஆட்சேபிக்காது என்று போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பாஸி தெரிவித்தார்.

முன்னதாக பாட்டியால கோர்ட் வளாகத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிய உச்ச நீதிமன்றம் அனுப்பிய வழக்கறிஞர்கள் குழுவிடம் கண்ணய்ய குமார் தெரிவிக்கும் போது, “போலீஸ் மீது எனக்கு எந்தவித புகார்களும் இல்லை. கோர்ட்டுக்கு அழைத்து வரும்போது கும்பல் ஒன்று என்னைத் தாக்கியது.

அப்போது போலீஸார் எனக்கு பாதுகாப்பு அளிக்க அவர்களால் முடிந்தவரை முயற்சி மேற்கொண்டனர். ஆனாலும் என்னைத் தாக்கினார்கள். சில போலீஸ் அதிகாரிகள் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள்” என்றார்.

இதனையடுத்தே கண்ணய்ய குமாருக்கு உள்காயங்கள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர் குழு வரவழைக்கப்பட்டது. மேலும், கண்ணய்ய குமாரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க நீதிபதி போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

இத்துடன் அல்லாமல் திஹார் சிறை கண்காணிப்பாளருக்கும் கண்ணய்ய குமாரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி: ஜே.என்.யூ. விவகாரத்தில், அதன் மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்ய குமாருக்கான நீதிமன்றக் காவலை மார்ச் 2-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி - பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது தாக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் விவரம்:>கண்ணய்ய குமாருக்கு மார்ச் 2 வரை நீதிமன்ற காவல்: பாட்டியாலா வளாகத்தில் மீண்டும் வன்முறையால் பரபரப்பு

SCROLL FOR NEXT