மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த 25 சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தலா ஒரு வீட்டை இலவசமாக வழங்குகிறார்.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விவேக் ஓபராய். நடிகர் அஜித்தின் 'விவேகம்' தமிழ்த் திரைப்படத்தில் இவர் நடித்து வருகிறார். நடிப்பு மட்டுமன்றி ரியல் எஸ்டேட் தொழிலிலும் விவேக் ஓபராய் கால் பதித்துள்ளார். அவரது 'கரம் இன்பராஸ்டிரக்சர் பிரைவேட் லிமிடெட்', மகாராஷ்டிரத்தின் பல்வேறு பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அண்மையில் நடத்திய தாக்குதல்களில் உயிரிழந்த 25 சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு வீடு இலவசமாக வழங்கப்படும் என்று நடிகர் விவேக் ஓபராய் அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தின் தாணே நகரில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட உள்ளன. இதுகுறித்து சிஆர்பிஎப் மூத்த அதிகாரி ஒருவர் கூறியபோது, 4 குடும்பங்களிடம் ஏற்கெனவே வீடுகள் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள 21 குடும்பங்களுக்கு விரைவில் வீடுகள் வழங்கப்பட உள்ளன என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
சிஆர்பிஎப் படையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விவேக் ஓபராய்க்கு மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.