சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஆந்திராவில் நேற்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரை போலீ ஸார் கைது செய்தனர். பல இடங்களில் தடியடி நடத்தப்பட்டது.
ஆந்திர மறுசீரமைப்பு சட்டத்தின்படியும், தேர்தலின்போது பாஜக கொடுத்த வாக்குறுதியின் படியும் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலி யுறுத்தி நேற்று மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி யின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு விடுத்திருந்த இந்தப் போராட்டத்துக்கு, காங் கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமல்லாது வேறு சில அமைப்பு களும் ஆதரவு தெரிவித்திருந்தன.
இதையடுத்து, நேற்று அதிகாலை முதலே ஆந்திராவில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகள் முன்பு எதிர்க் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் இயங்காததால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. பல இடங்களில் வங்கிகள் செயல்பட வில்லை. பெட்ரோல் பங்க்குகள், திரையரங்குகளும் மூடப்பட்டன. வெளி மாநிலங்களில் இருந்து திருப்பதிக்கு வந்த பக்தர்கள், வாகனப் போக்குவரத்து முடங்கியதால் பல இடங்களுக்கு நடந்தே சென்றனர். திருப்பதி-திருமலை இடையே மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன.
திருப்பதி காந்தி சிலை அருகே கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று காலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். அப்போது போலீஸார் அவர்களை கைது செய்ய முயன் றனர். இதனால் போலீஸாருக் கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதேபோல மாநிலம் முழுவதும் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரை போலீ ஸார் கைது செய்தனர்.
அரசு பரிசீலிக்கிறது: ஜேட்லி
நேற்று காலை மக்களவை கூடியதும், மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் மற்றும் எதிர்க்கட்சி யான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி கோஷமிட்டனர். இதனால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டதால் அவை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.
உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் அவை கூடிய போதும், ஆந்திர எம்.பி.க்கள் இந்தப் பிரச்சினையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அப்போது, இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசும்போது, “குறிப்பிட்ட பிரச்சினை (ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து) குறித்து சில உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் அரசு தனது வாக்குறு தியை நிறைவேற்றும். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது” என்றார்.
ஆனால், இதற்கு காலக் கெடு நிர்ணயிக்க வலியுறுத்தி ஆந்திர எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். அப்போது, குறுக்கிட்ட மக்களவை துணைத் தலைவர் எம்.தம்பிதுரை “இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளதால் அவையை நடத்த அனுமதிக்க வேண்டும்” என்றார். நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் ஆனந்த்குமாரும் இதே கருத்தைத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற வளாகத்தி லும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ஆந்திர எம்.பி.க்கள் நேற்று பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.