தாய், தந்தை, தங்கை, உறவு பெண்ணை கொடூரமாக கொலை செய்த கேரள இளைஞர் கேடல் ஜுன்சென் ராஜா மனநல மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கேரள தலைநகர் திருவனந்த புரம், நந்தன்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா தங்கம் (60). ஓய்வு பெற்ற பேராசிரியர். இவரது மனைவி டாக்டர் ஜுன் பத்மா (58). இவர்களது மூத்த மகன் கேடல் ஜுன்சென் ராஜா (30). இளைய மகள் கரோலின் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார். இவர்களோடு லலிதா (70) என்ற உறவு பெண்ணும் தங்கியிருந்தார்.
கடந்த 8-ம் தேதி ராஜா தங்கத்தின் வீடு தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அப்போது வீட்டுக்குள் ராஜா தங்கம், டாக்டர் ஜுன் பத்மா, கரோலின், லலிதா ஆகியோர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த கொலைகள் தொடர்பாக ஜுன்சென் ராஜாவை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன. இதுதொடர்பாக போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:
பிளஸ் 2 வரை மட்டுமே படித்துள்ள ஜுன்சென் ராஜா, மனநல குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார். குடும்ப கவுரவம் கருதி அவரது பெற்றோர் இதை வெளியில் கூறவில்லை. அவர்களாகவே மகனுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
ஆனால் தந்தையின் கண்டிப்பு காரணமாக அவரை ஜுன்சென் ராஜா கடுமையாக வெறுத் துள்ளார். அவரையும் குடும்பத் தினரையும் கொலை செய்ய கடந்த சில மாதங்களாக திட்ட மிட்டுள்ளார். அதற்காக ஆன் லைனில் கோடரி வாங்கியுள்ளார்.
கடந்த 8-ம் தேதி தாயார் ஜுன் பத்மாவை தனது அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை கோடரியால் வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார். அடுத்து தங்கை கரோலினை தனது அறைக்கு அழைத்துச் சென்று வெட்டி கொன்றுள்ளார்.
அதைத் தொடர்ந்து தந்தை ராஜா தங்கம் மற்றும் உறவுப் பெண் லலிதாவை அடுத்தடுத்து கொலை செய்துள்ளார். பின்னர் பெட்ரோலை ஊற்றி வீட்டுக்கு தீ வைத்துள்ளார். அங்கிருந்து தப்பியோடிவிட்ட ஜுன்சென் ராஜாவை ஒருநாளைக்குப் பிறகு கைது செய்தோம்.
இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்ட ராஜா சக கைதிகளை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து திருவனந்தபுரம் ஓலம்பராவில் உள்ள மனநல மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.