டெல்லியில் இன்று தமிழக விவசாயிகள் 'சாட்டையடி போராட்டம்' நடத்தினர். பல்வேறு கோரிக்கைகளுக்கான இவர்கள் போராட்டம் இன்று 36-வது நாளை எட்டியுள்ளது.
டெல்லியின் அய்யாகண்ணு தலைமையிலான தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. வங்கிக் கடன் ரத்து, வறட்சிக்கானக் கூடுதல் நிவாரணம் மற்றும் காவிரி மேலாண்மை அமைப்பது உட்படப் பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்துள்ளனர்.
இதில், அன்றாடம் அரசு மற்றும் பொதுமக்கள் கவனத்தை கவரும் வகையில் பல்வேறு வகை போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்தவகையில் இன்று விவசாயிகள் 'சாட்டையடி போராட்டம்' நடத்தினர். இதில், தம் கோரிக்கைகளுடன் பிரதமர் நரேந்தர மோடியை அணுகுவதாகவும் அவர் பேச மறுத்து சாட்டையடி கொடுத்து விரட்டுவதாகவும் பாசாங்கு செய்தனர். இதற்காக, ஒருவருக்கு பிரதமர் மோடியின் முகமூடியை அணிய வைத்து அவர் கையில் சாட்டையை கொடுத்திருந்தனர். இவரிடம் சாட்டையடி பெற்ற விவசாயிகள் தரையில் விழுந்து உருளுவது போலவும் நடித்துக் காட்டினர்.
இது குறித்து 'தி இந்து'விடம் அய்யாகண்ணு கூறுகையில், ''கடும் வறட்சி, வங்கிக் கடன் உட்படப் பல பிரச்சினைகளால் தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உருவாகி உள்ளது. இந்த சூழலில் எங்களை சந்தித்து தீர்வு காணப் பிரதமர் மோடி மறுத்து வருகிறார். அவரது செய்கையால் நாங்கள் படும் பாதிப்பை உணர்த்தும் வகையில் இந்த சாட்டையடி போராட்டம் நடத்துகிறோம்'' எனத் தெரிவித்தார்.
டெல்லியின் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தீவிரமாகப் போராடி வருகின்றனர். இவர்களுக்கு உ.பி., பஞ்சாப், ஹரியானா உட்பட பல வட இந்திய மாநில விவசாய சங்கங்களும் நேரில் வந்து ஆதரவளித்து வருகின்றனர்.