இந்தியா

ஊழலுக்கு துணை போகாததால் சுகாதாரத் துறை செயலர் மாற்றம்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

மத்திய சுகாதாரத் துறை செயலர் கேசவ் தேசிராஜு இடமாற்றத்துக்கு ஊழல் கறை படிந்த கேத்தன் தேசாயை மீண்டும் இந்திய மருத்துவ கவுன்சில் தலைவராக்க அவர் உடன்படாததுதான் காரணம் என்று ஆம் ஆத்மி கட்சியும் ஜன் ஸ்வஸ்தியா அபிமான் என்ற தன்னார்வ அமைப்பும் குற்றம் சாட்டியுள்ளன.

1978ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான தேசிராஜு மிகவும் நேர்மையானவர் என பெயர் எடுத்தவர். சுகாதாரத் துறை செயலராக இருந்த அவர், கடந்த மாதம் திடீரென நுகர்வோர் நலத் துறைக்கு மாற்றப்பட்டார். சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆஸாத்தின் சில திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டதால்தான் அவர் திடீரென மாற்றப்பட்டார் என புகார் எழுந்துள்ளது.

கடந்த 2010ல் இந்திய மருத்துவ கவுன்சில் தலைவராக இருந்த டாக்டர் கேத்தன் தேசாய், தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்க ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாக சிபிஐயால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் பணியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இவரை மீண்டும் மருத்துவ கவுன்சில் தலைவராக்க, ஆஸாத் விரும்பியதாகவும் இதற்கு தேசிராஜு சம்மதிக்கவில்லை என்றும் அதனால்தான் தேசிராஜு பணிமாற்றம் செய்யப்பட்டார் என ஜன் ஸ்வஸ்தியா அபிமான் அமைப்பு புகார் தெரிவித்துள்ளது.

“கேத்தன் தேசாயை மீண்டும் மருத்துவ கவுன்சில் தலைவராக்க அமைச்சர் ஆஸாத் முயற்சி எடுத்தார். அதற்கு தேசிராஜு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால்தான் அவர் இடம் மாற்றப்பட்டார்” என ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷனும் புகார் கூறியுள்ளார்.

“ஆட்சிப் பணியில் இருக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை 3 ஆண்டுகளுக்கு பணி மாற்றம் செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி, தேசிராஜு மாற்றப்பட்டுள்ளார்” என முன்னாள் கேபினட் செயலர் டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.

தேசிராஜு இடமாற்றத்துக்கு வேறொரு காரணமும் கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தனது ரேபரேலி தொகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டினார்.

மருத்துவமனை தொடங்க தாமதம் ஆகும் என்பதால், குறைந்தபட்சம் புறநோயாளிகள் பிரிவை தொடங்க சோனியா விரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் தாமதம் ஏற்பட்டதால் தேசிராஜு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆஸாத் மறுப்பு

இதனிடையே தேசிராஜு இடமாற்றத்துக்கு, முக்கிய திட்டங்களை நிறைவேற்றுவதில் அவர் ஆர்வம் காட்டததுதான் காரணம் என சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆஸாத் கூறியுள்ளார்.

“எனது தலைமையில் நடந்த பல முக்கிய கூட்டங்களில் கலந்துகொண்ட தேசிராஜு, உரிய கவனம் செலுத்த மாட்டார். எப்போதும் தனது செல்போனில் எஸ்எம்எஸ் அனுப்பிக் கொண்டிருப்பார். அல்லது இமெயில் பார்த்துக் கொண்டிருப்பார். தனது வேலைகளை கீழ் அதிகாரிகளிடம் விட்டுவிடுவார். இதனால் பல திட்டங்கள் தாமதமானது. இதை எப்படி அனுமதிக்க முடியும்?” என்று கேபினட் செயலர் அஜித்குமார் சேத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஆஸாத் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT