விஐபிக்களின் வாகனங்களில் சிவப்பு விளக்கை அகற்ற உத்தரவிட்டது நம் மனங்களிலிருந்து விஐபி கலாச்சாரத்தை அகற்றுவதற்காகவே, வாகனங்களில் சிகப்பு விளக்கு என்பது எப்படியோ ஒரு விஐபி கலாச்சாரமாக மாறிவிட்டது என்று மன் கி பாத் வானொலி உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் 5-ம் தேதி விண்ணில் ஏவப்படும் ரூ.235 கோடி மதிப்பிலான ‘தெற்காசிய செயற்கைக்கோள்’ சார்க் நாடுகளுக்கான பரிசு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, 3 ஆண்டுகள் உழைப்பில் ரூ.235 கோடி செலவில் ‘தெற்காசிய செயற்கைக்கோளை’ தயாரித்துள்ளது. இது 50 மீட்டர் உயரம் 2,230 கிலோ எடை கொண்டதாகும். இதில் 12 கே.யு.டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த செயற்கைக்கோள் நேபாளம், பூடான், மாலத்தீவு, வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சார்க் நாடுகளுக்கு பரிசாக வழங்கப்பட உள்ளது. பாகிஸ்தான் மட்டும் இத்திட்டத்தில் இணையவில்லை.
சார்க் நாடுகள் ஒவ்வொன்றுக்கும் செயற்கைக்கோளின் ஒரு டிரான்ஸ்பான்டர் ஒதுக்கப்பட உள்ளது. அதன்மூலம் தொலைத்தொடர்பு, டிடிஎச் சேவை, தொலைக்காட்சி ஒளிபரப்பு, செயற்கைக்கோள் வழியிலான தொலைநிலைக் கல்வி, தொலைநிலை மருத்துவ சேவை, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட சேவைகளை வழங்க முடியும்.
மேலும் சார்க் நாடுகளுக்கு இடையே ‘ஹாட் லைன்’ தொலைபேசி வசதியையும் ஏற்படுத்த முடியும். நிலநடுக்கம், புயல், வெள்ளம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களின்போது ‘ஹாட்லைன்’ மூலம் சார்க் நாடுகள் தங்களுக்குள் தகவல்களை பரிமாற்றம் செய்து உரிய நேரத்தில் உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
சுமார் 12 ஆண்டுகள் ‘தெற்காசிய செயற்கைக்கோள்’ செயல்படும். அதன்படி ஒட்டுமொத்தமாக ரூ.450 கோடி மதிப்பிலான சேவைகளை சார்க் நாடுகளுக்கு இந்தியா இலவசமாக வழங்கியுள்ளது. இந்த திட்டம் இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் மாதாந்திர வானொலி உரையான ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது. அதில் ‘தெற்காசிய செயற்கைக்கோளை’ குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை பிரதமர் வெளியிட்டார். அவர் கூறியிருப்பதாவது:
அண்டை நாடுகளுடன் இந்தியா நட்புறவைப் பேணி வருகிறது. அந்த நாடுகளின் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டுள்ளது. அதன்படி சார்க் நாடுகளின் வளர்ச்சிக்காக வரும் மே 5-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ‘தெற்காசிய செயற்கைக்கோள்’ விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இது சார்க் நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் விலைமதிப்பற்ற பரிசாகும்.
நாடு முழுவதும் விஐபி கலாச்சாரத்தை ஒழிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக விஐபிக்களின் வாகனங்களில் சிவப்பு விளக்கை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு மக்கள் முழுஆதரவு அளித்துள்ளனர். என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு இந்தியரும் விஐபிதான்.
தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் உங்கள் வீடு தேடி வரும் தபால்காரர், பால்காரர், காய்கறி விற்பனையாளரின் தாகத்தைத் தணிக்க தண்ணீர் கொடுங்கள். பறவைகள், விலங்குகளின் தாகத்தை தீர்க்க வாளி, தொட்டியில் தண்ணீரை நிரப்பி வையுங்கள்.
கோடை காலத்தை இளைஞர்கள் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும். புதியவைகளை கற்று தங்கள் திறமைகளை மென்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மக்களோடு மக்களாக ரயில், பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்தில் பயணம் செய்து அவர்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ள வேண்டும். குடிசைப் பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளோடு விளையாடலாம்.
இளைஞர்கள் நாள்தோறும் புதியவைகளை கற்றுக் கொள்ள வேண்டும். அதோடு நிற்காமல் தாங்கள் கற்றதை பிறருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். டிஜிட்டல் பண பரிவர்த்தனையை அதிகரிக்க மத்திய அரசின் ‘பீம்’ செயலியை நாட்டு மக்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்யுங்கள். ஒரு நாளைக்கு 20 பேருக்கு ‘பீம்’ செயலியை அறிமுகம் செய்தால் உங்களுக்கு ரூ.200 பரிசாக வழங்கப்படும்.
பருவநிலை மாற்றம் குறித்து மிக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது அதன் விளைவுகளை நாம் கண்கூடாக பார்க்கிறோம். எனவே சுற்றுச்சுழல் பாதுகாப்பில் நாம் அனைவரும் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.
மே தினத்தையொட்டி தொழிலாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகப் பாடுபட்ட அம்பேத்கரை நினைவுகூர்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.