இந்தியா

‘நான் ஏழை’: வறிய குடும்பத்தினரை இழிவுபடுத்திய ராஜஸ்தான் அரசுக்கு நோட்டீஸ்

செய்திப்பிரிவு

ராஜஸ்தான் மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர் குடும்பத்தினரின் வீட்டுச் சுவற்றில் ‘நான் ஏழை’ என்று எழுதிய ‘இழிவான போக்கை’ கண்டித்து தேசிய மனித உரிமை ஆணையம் ராஜஸ்தான் அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராஜஸ்தான் தவுசா மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள 50,000 வீடுகளின் சுவற்றில், “நான் ஏழை நாங்கள் தேசிய உணவுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் பெறுகிறோம்” என்று எழுதிய தகாத போக்க தாங்களாகவே கவனத்தில் எடுத்துக் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம் ராஜஸ்தான் அரசை விளக்கம் கேட்டுள்ளது.

அரசு மானியங்கள் தவறான நபர்களுக்குச் செல்வதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று ராஜஸ்தான் அரசு தெரிவித்திருந்தது.

தேசிய மனித உரிமை ஆணையம் இதனை வறுமை உள்ளோரின் கவுரவத்தைக் குலைக்கும் செயல் என்பதாகப் பார்க்கிறது.

“எந்த ஒரு நாகரீக சமூகமும் இத்தகைய அறிவுகெட்ட செயல்களை பாராட்டாது” என்று ஆணையம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

எனவே ராஜஸ்தான் அரசு இது குறித்து 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கவும், இத்தகைய இழி நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் தெரிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து பாஜக அரசு எந்த உத்தரவையும் இடவில்லை என்றும் முந்தைய அரசு 2009-ல் மேற்கொண்ட அதே நடைமுறையை அதிகாரிகள் கடைபிடித்ததாகவும் ராஜஸ்தான் மாநில பஞ்சாயத் ராஜ் அமைச்சர் ராஜேந்திர ராத்தோர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT