டெல்லி ராம்ஜாஸ் கல்லூரியில் ஏபிவிபி அமைப்பினரின் வன்முறையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி பல்கலைக்கழக மாணவிக்கு ட்விட்டர் வாயிலாக பலாத்கார அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது தொடர்பாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது
டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குர்மேகர் கவுர் என்ற மாணவிக்கு ட்விட்டர் வாயிலாக பாலியல் பலாத்கார அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குர்மேகர் கவுர் டெல்லி மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
குமேகர் கவுர் கார்கில் போரில் உயிரிழந்த வீரரின் மகள் ஆவார். ட்விட்டர் மூலம் தனக்கு அளிக்கப்பட்ட பாலியல் பலாத்கார அச்சுறுத்தல் தொடர்பான ஆதாரங்களை மகளிர் ஆணையத்திடம் கவுர் ஒப்படைந்துள்ளார் குமேகர் கவுர்
இதுகுறித்து டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால் கூறும்போது, "குர்மேகர் கவுருக்கு ட்விட்டர் வாயிலாக பலாத்கார அச்சுறுத்தல்களும், கொலை அச்சுறுத்தல்களும் வந்தன. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி போலீஸ் கமிஷனரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன். விரைவில் போலீஸார் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்" என்றார்.
முன்னதாக டெல்லி ராம்ஜாஸ் கல்லூரியில் உமர் காலித் பங்கேற்ற கருந்தரங்க நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏபிவிபி (அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்) மாணவ அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
இதற்கு குமேகர் கவுர் உட்பட பல மாணவர்கள் ஏபிவிபி இயக்கத்தை எதிர்த்து இணையத்தில் பரப்புரை செய்தனர். "நான் டெல்லி பல்கலைக்கழகத்தின் மாணவி. நான் ஏபிவிபியை கண்டு பயப்பட மாட்டேன். நான் தனியாக இல்லை என்னுடன் பல இந்திய மாணவர்கள் உள்ளனர்" என்று அட்டையில் எழுத்தப்பட்ட வாசகங்களை கையில் ஏந்தியபடி தங்கள் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றினர்.
இந்தப் பதிவுகளுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஷேவாக், பாலிவுட் நடிகர் ரந்திப் உண்டா ஆகியோர் கிண்டல் செய்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.