இயற்கை எரிவாயு விலை நிர்ணய விவகாரம் தொடர்பராக முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ள விசாரணை உத்தரவு பற்றி காங்கிரஸ், சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட் கட்சிகள் கருத்து கூறியுள்ளன.
பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி: கேஜ்ரிவாலின் அறியாமையை எண்ணி வருத்தப்பட வேண்டி இருக்கிறது. ஒரு அரசு செயல்படும் முறையை அவர் அறிந்து கொள்வது அவசியம். இதன் விலை, சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களால் நிர்ணயிக்கப்படுகிறதே தவிர, முகேஷ் அல்லது தியோராவால் அல்ல.’
இயற்கை எரிவாயு விலைகளை குறைப்பதில் நான் அதிக கவனம் செலுத்தினேன். கிணற்றில் இருந்து நீர் இறைப்பது போல் எரிவாயு எடுப்பதாக கேஜ்ரிவால் நினைக் கிறார் என்றார் மொய்லி,
கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
கேஜ்ரிவாலின் அறிவிப்பை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான குருதாஸ் குப்தா வரவேற்றுள்ளார்.
அவர் கூறியதாவது: ‘விலை உயர்வை அரசு அனுமதித்த விஷயத்தில் கேஜ்ரிவாலின் முடிவை நான் வரவேற்கிறேன்.
இதில், முழுமையாக அரசும் குறிப்பாக மொய்லியும் ஏமாற்றியுள்ளனர். அளவுக்கு அதிகமான லாபங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிப்பதில் அரசும் சம்பந்தப்பட்டிருப்பதை காட்டுகிறது. இது பொதுப்பணத்தை கொள்ளை அடிக்கும் செயல். இயற்கை எரிவாயு விலை உயர்வு கண்டிப்பாக மின்சாரம் மற்றும் உரத்துறைகளை பாதிக்கும்.