மகாராஷ்டிர மாநிலத்தில் பயிற்சி வி்மானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானிகள் இருவர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தின் கோண்டியா நகரில் ராஜீவ் காந்தி தேசிய விமானப் பயிற்சி நிறுவனம் உள்ளது. இங்கிருந்து நேற்று காலை 9.05 மணிக்கு ரஞ்சன் குப்தா என்ற மூத்த விமானியும், ஷிவானி என்ற பயிற்சி விமானியும் டிஏ42 என்ற சிறிய ரக பயிற்சி விமானத்தில் புறப்பட்டனர். காலை 9.40 மணிக்கு அந்த விமானம் மும்பையில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் தகவல் தொடர்பை இழந்தது.
இந்நிலையில் கோண்டியா மாவட்டம், மகால்காவ்-தியோரி என்ற இடத்தில் நீரோட்டம் இல்லாத வைன்கங்கா நதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானி, பயிற்சி விமானி ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.