இந்தியா

பசுக்களை காப்பதாகக் கூறி வன்முறையில் ஈடுபடும் போலிகளை தண்டிக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை

பிடிஐ

பசுக்களை பாதுகாப்பதாகக் கூறி வன்முறையில் ஈடுபடும் போலி பாதுகாவலர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.

தெலங்கானாவில் ரூ.40,000 கோடியில் அனைத்து வீடுகளுக் கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வழங்கும் ‘பகீரதன்’ திட்டத்தை அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் தொடக்க விழா மேடக் மாவட்டம் கோமதி பண்டா கிராமத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று திட்டத்தை தொடங்கிவைத்தார்.

தண்ணீர் சிக்கனம் தேவை

விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:

தெலங்கானா மாநிலம் உதயமாகி 2 ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்துள்ளது. ஆனால் அதன் வளர்ச்சி அனைவரும் பாராட்டும் வகையில் உள்ளது. மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து செயல்பட்டால் புதிய சாதனைகளைப் படைக்க முடியும்.

ஒரு காலத்தில் யூரியா உரம் திருடப்பட்டது. அதற்கு வழங்கப்பட்ட மானியம் விவசாயிகளை சென்றடையாமல் வேறு சிலரின் கைகளுக்குச் சென்றது. இப்போது திருட்டு தடுக்கப்பட்டு, ஊழல் அறவே ஒழிக்கப்பட்டுள்ளது.

போலி பாதுகாவலர்கள்

ஒரு தாய் தன் குழந்தைக்கு பாலூட்டி வளர்க்கிறாள். அதேநேரம் ஒரு பசு தன் வாழ்நாள் முழுவதும் மனிதர்களுக்கு பால் வழங்கி அவர்களை வாழவைக்கிறது என்று மகாத்மா காந்தி கூறினார். அவரது கூற்று நூற்றுக்கு நூறு உண்மை. பசுக்கள் நமது செல்வம்.

உண்மையான பசு பாது காவலர்களுக்கு நாம் மதிப்பும் மரியாதையும் அளிக்க வேண் டும். ஆனால் சிலர் பசுக்களை பாதுகாப்பதாகக் கூறி வன்முறை யில் ஈடுபட்டு வருகின்றனர். சமூகத்தில் பிரிவினை, பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

அத்தகைய போலி பாது காவலர்களிடம் நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண் டும். நமது நகரங்கள், கிராமங்களில் அவர்கள் வன்முறையில் ஈடுபட முயன்றால் தடுத்து நிறுத்த வேண்டும். போலி பாதுகாவலர்கள் மீது அந்தந்த மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து தண்டிக்க வேண்டும்.

வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம். நாட்டின் ஒற்றுமை யையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க வேண்டியது நமது பிரதான கடமை. நாடு வளர்ச்சி அடைந்தால் நமது பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்பட்டுவிடும். எனவே மாற்றத்தை, வளர்ச்சியை மனதில் வைத்து ஊக்கமுடன் செயல்படுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேசியபோது, “மத்தியில் முதல்முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஊழல் இல்லாத ஆட்சி அமைந்துள்ளது. நான் பிரதமரிடம் ஒரு லட்சம் கோடி ரூபாய் தாருங்கள் என்று கேட்கமாட்டேன். அவரின் அன்பு மட்டும் போதுமானது’’ என்று தெரிவித்தார்.

என்னை சுட்டுத் தள்ளுங்கள்: மோடி ஆவேசம்

ஹைதராபாதில் நேற்று நடந்த பாஜக கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: உலகம் ஒரு குடும்பம். ஆனால் சிலர் தலித் சகோதரர்களையும், சகோதரிகளையும் தாக்கி வருகிறார்கள். அவர்களை உலகம் ஒருபோதும் மன்னிக்காது. நீங்கள் என்னை தாக்க விரும்பினால் என்னை தாக்குங்கள். தலித் மக்களை தாக்க வேண்டாம். சுட வேண்டுமென்றால் என்னை சுட்டுத் தள்ளுங்கள். சமூகத்தில் பின்தங்கியவர்களையும் தலித் மக்களையும் பாதுகாக்க வேண்டியது நமது கடமை.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT