பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி வளர்ச்சியின் தூதர் என்றும் அச்சத்தின் அடையாளம் அல்ல என்றும் அக்கட்சியின் துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட முஸ்லிம்களுக்கு போதுமான அளவில் பாஜக வாய்ப்பு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட நக்வி கூறியதாவது:
சில அரசியல் கட்சிகள் முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், சிறுபான்மையினத்தவர்களுக்கு சமூக, பொருளாதார மற்றும் கல்விக்கான முன்னேற்றத்தில் சம உரிமை வழங்க வேண்டும் என்ற உண்மையான நோக்கம் அந்தக் கட்சிகளுக்கு இல்லை.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் சமூக மற்றும் அரசியல் அதிகாரத்தின் மூலம் அனைத்து நிலையிலும் சிறுபான்மையினத்தவர்கள் மேம்பாடு அடைய நடவடிக்கை எடுக்கப்படும். வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுவிடுமோ என்ற அச்சம் காரணமாக, காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் மோடியின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன.
நரேந்திர மோடி அச்சத்தின் அடையாளம் அல்ல. அவர் வளர்ச்சியின் தூதராக திகழ்கிறார். வரும் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் 50 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்றார்.