இந்தியா

வரும் 2017-18 நிதியாண்டுக்கான நிதி மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்: மாநிலங்களவையில் கொண்டுவந்த 5 திருத்தம் நிராகரிப்பு

பிடிஐ

வரும் நிதியாண்டுக்கான (2017-18) நிதி மசோதாவுக்கு நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் வழங்கியது. முன்னதாக மாநிலங்களவையில் கொண்டுவந்த 5 திருத்தங்களை மக்களவை நிராகரித்துவிட்டது.

கடந்த ஆண்டு வரை பிப்ரவரி இறுதியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் பட்ஜெட்டின் அம்சங்கள் புதிய நிதியாண்டின் தொடக்கத்தில் அமல் படுத்த முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில், ஏப்ரல் 1-ம் தேதி முதல் பட்ஜெட் அம்சங்களை அமல்படுத்துவதற்கு ஏதுவாக, முன்கூட்டியே மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.

இதன்படி கடந்த பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம் முடிந்ததையடுத்து, 40 திருத்தங்களுடன் நிதி மசோதா வுக்கு (பண மசோதாவாக) மக்களவை கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியது.

இந்த மசோதா மீது மாநிலங் களவையில் நேற்று முன்தினம் விவாதம் நடைபெற்றது. அப்போது அதில் 5 திருத்தங்களைச் செய்து ஒப்புதல் வழங்கியது.

குறிப்பாக, வருமான வரி சோதனை நடத்துவதற்கு அத்துறை சார்ந்த அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்ய நிதி மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது. இதைக் கைவிட வேண்டும் என மாநிலங் களவை திருத்தம் கொண்டுவந்தது.

இதுபோல, கார்ப்பரேட் நிறு வனங்கள் அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் நன்கொடை வழங்கலாம் என்று மக்களவையில் கொண்டுவந்த திருத்தத்தை மாநிலங்களவை ஏற்க மறுத்தது.

அதாவது கடந்த 3 நிதியாண்டு களின் நிகர லாபத்தில் 7.5 சதவீத தொகைக்கு மேல் நன்கொடையாக வழங்க தடை விதிக்க வேண்டும். எந்தக் கட்சிக்கு நன்கொடை வழங்கப்பட்டது என வெளிப் படையாக தெரிவிக்க வேண்டும் என மாநிலங்களவையில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. பண மசோதா என்பதால் மாநிலங்களவையின் திருத்தங்களை ஏற்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் நடவடிக்கை முடிந்தது

மாநிலங்களவையில் திருத்தம் செய்யப்பட்டதால் நிதி மசோதா நேற்று மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. அப் போது, மாநிலங்களவையில் கொண்டுவந்த திருத்தங்கள் நிரா கரிக்கப்பட்டன. இதையடுத்து, முந்தைய நிலையின் அடிப்படை யிலேயே இந்த மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் வழங்கியது. இதன்மூலம் நிதி மசோதா நிறைவேற்றப்பட்டு பட்ஜெட் நட வடிக்கைகள் முடிவுக்கு வந்தன.

முன்னதாக, நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறும்போது, “மாநிலங்களவையில் கொண்டு வந்த திருத்தங்களை ஏற்க முடியாது. குறிப்பாக கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கும் நன்கொடை விவகாரத்தில் வெளிப் படைத்தன்மையை ஊக்குவிப்பது தொடர்பான கருத்துகளை அரசியல் கட்சிகள் தெரிவிக்கலாம்” என்றார்.

SCROLL FOR NEXT