பெருமுதலாளித்துவத்தின் மற்றொரு முகம்தான், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சாடினார்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியது:
"மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில், வியாபாரத்தின் அனைத்துப் பிரிவுகளும் சிறப்பாக இருக்கிறது. ஆனால், நரேந்திர மோடியோ வியாபாரத்தின் சில பிரிவினர்களுக்குத்தான் உகந்தவர். ஏனெனில், அவர் பெருமுதலாளித்துவத்தின் மற்றொரு முகமாகவே செயல்படுபவர்.
நாட்டின் பொருளாதாரம் 20 மாதங்களுக்கு முன்பு இருந்த நிலையைவிட, தற்போது நிலையாகவும் பலமாகவும் இருக்கிறது. எதிர்பார்த்ததை போல நாட்டின் நிதிப் பற்றாக்குறை ஜி.டி.பி.யில் 4.6 சதவீதத்துக்குள் இருக்கும்.
இப்போது தர குறைப்பு பற்றி யாரும் பேசவில்லை. அதேபோல பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் மத்திய அரசு வெற்றி அடைந்திருக்கிறது.
மன்மோகன் சிங் தலைமையிலான அரசின் கீழ் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த எரிவாயு விலை உயர்வு சரியானதே. இந்த விலை உயர்வால் ஏற்படும் பல சாதக பாதகங்களை ஆராய்ந்து, கலந்து பேசிதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கொள்கைகள்தான் பங்குச்சந்தைகளின் ஏற்றத்துக்கு காரணமே தவிர, பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கையால் அல்ல" என்றார் ப.சிதம்பரம்.
தமிழகத்தின் சிவகங்கை தொகுதியில் தொடர்ந்து 8 முறை போட்டியிட்டு 7 முறை வெற்றிபெற்று 23 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அமைச்சராகவும் வலம் வந்தவர் ப.சிதம்பரம்.