போர் முனையில் களப் பணி யாற்றிய அனுபவமுள்ள பிரபல பத்திரிகையாளர் அனிதா பிரதாப், இப்போது மக்களின் பிரதிநிதியாக செயல்பட தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி மக்களிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைத் தொடர்ந்து, அக்கட்சியில் இணைந்து மக்கள் பணியாற்ற வந்த பிரபலங்களில் அனிதா பிரதாப் முக்கியமானவர்.
பத்திரிகைத் துறையில் அனிதா பிரதாப் நிகழ்த்திய சாதனைகளைப் பட்டியலிடத் தேவையில்லை. அவர், யாழ்ப் பாணத்தின் அடர்ந்த கானகத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பேட்டி எடுத்த பெருமைக்குரியவர். அவரின் துணிச்சலான செயல்பாடுகள் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள, இந்த பேட்டி ஒன்றே போதும்.
வரும் மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் எர்ணாகுளம் தொகுதியில் அனிதா பிரதாப் போட்டியிடவுள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பே, மக்களை சந்தித்து ஆதரவு கோர தொடங்கியுள்ள அனிதா பிரதாப்பை சந்தித்து, பேட்டி தருமாறு கேட்டவுடன் ஆர்வமாக நம்மிடையே பேசினார்.
கோட்டயத்தில் பிறந்திருந் தாலும், தனது சிறு வயதின் பெரும்பகுதியை கொச்சியில் தான் அனிதா பிரதாப் செலவிட்டுள் ளார். அங்குள்ள தனியார் நிறுவனத்தில் அனிதாவின் தந்தை பணிபுரிந்து வந்தார். பின்னாட்களில் கல்வி கற்கவும், தொழில் நிமித்தமாகவும் பல்வேறு நகரங்களில் வசித்துள்ள அனிதாவுக்கு, தான் பிறந்த மண்ணின் பாசம் எப்போதும் குறைந்ததில்லை.
தேர்தலில் போட்டியிடுவது என முடிவு செய்தவுடனே, அவர் கண் முன்னே வந்தது எர்ணாகுளம் மக்களவைத் தொகுதிதான். இத்தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக அனிதா பிரதாப் களமிறங்கியுள்ளார்.
தனது குடும்பம் குறித்து பேசிய அனிதா, “எனது கணவர் ஆர்னே ராய் வால்த்தர், நார்வேயைச் சேர்ந்தவர். என்னைப் போலவே கொச்சியை நேசிப்பவர். ஓய்வு பெற்ற பின்பு, குடியேறுவதற்காக வைபின் பகுதியில் 2008-ம் ஆண்டே வீடு வாங்கிவிட்டார். தற்போது நார்வேக்கான ஜப்பான் தூதராக இருக்கும் அவர் விரைவில் ஓய்வு பெறவுள்ளார்” என்றார்.
தனது பத்திரிகை உலக அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், “1982-ம் ஆண்டு ஓணம் பண்டிகையின்போது, வைபின் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 78 பேர் உயிரிழந்தனர். 63 பேர் கண் பார்வையிழந்தனர். 15 பேர் உடல் உறுப்புகள் செயலிழந்து முடங்கினர். கிட்டத்தட்ட 650 குடும்பங்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டன.
ஆனால், இந்த சம்பவத்தில் இருந்து யாரும் பாடம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. 2000-ம் ஆண்டு கல்லுவத்துக்கள் பகுதியில் கள்ளச்சாராய சாவு குறித்து செய்தி சேகரிக்குமாறு எனது பத்திரிகை நிர்வாகம் கூறியபோது, இதுபோன்ற சம்பவங்கள் பற்றி எழுதுவதை விட்டுவிடலாமா என்று கூட தீவிர மாக யோசித்தேன்” என்கிறார்.
பத்திரிகையாளராக பலரது பாராட்டுகளையும் பெற்ற அவர், திடீரென அரசியல் பாதைக்கு திரும்பியது ஏன் என்று கேட்ட போது, “எனது பத்திரிகை பணியின் தொடர்ச்சியாகவே இதை பார்க்கிறேன். சமூக அவலங்களை களைய இந்த புதிய களம் வாய்ப்பாக இருக்கும் எனக் கருதுகிறேன்.
ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அக்கட்சியில் இணைந்துள்ளேன். குறிப்பாக ஊழல், மதவாதம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமான அரசின் தவறான கொள்கைகள் ஆகியவற்றிற்கு ஆம் ஆத்மி தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தேர்தலில் போட்டியிடவுள்ளதால், தொகுதி முழுவதும் பயணம் செய்து மக்களை சந்தித்து ஆதரவு கோரவுள்ளேன். இந்த தேர்தலில் தீவிரமாக தேர்தல் பணியாற்றவுள்ளேன்” என்றார்.
தெற்காசியா பகுதியில் போர் முனையில் பத்திரிகையாளராகப் பணியாற்றியது தொடர்பாக கேட்டபோது, “யுத்த பூமியில் செய்தி சேகரிக்கச் சென்றதால், அIங்கிருந்த மக்களின் துயரத்தை நேரடியாக அறிந்து கொள்ள முடிந்தது. போர் முனையில் அவதிப்படும் மக்களின் உணர்வுகள் என்னை பாதித்தன. தெற்காசியா பகுதியில் மனித உரிமையையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் வகையிலான முக்கிய பங்களிப்பை இந்தியா மேற்கொள்ள வேண்டும்.
இலங்கையில் உள்ள கள நிலவரத்தை ஆம் ஆத்மி கட்சியின் தலைமைக்கு தெரிவிப்பேன். தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும், அவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவது குறித்தும் தெரிவிப்பேன்” என்றார் அனிதா பிரதாப்