கறுப்புப் பணத்தை தாமாகவே மனமுவந்து ஒப்புக் கொண்டு கணக்கு காட்டுபவர்களுக்கு மன்னிப்பு வழங்கும் திட்டத்தின் படி அரசுக்கு ரூ.5000 கோடி மட்டுமே கணக்கில் வந்துள்ளது.
அதாவது பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் கணக்கில் காட்டப்படாத ரூ.5000 கோடி வருவாய் மட்டுமே வெளியாகியுள்ளது, ‘இது எதிர்பார்ப்புக்கு இணங்க இல்லை” என்று மத்திய அரசு ஏமாற்றம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வருவாய் செயலர் ஹஸ்முக் ஆதியா கூறும்போது, “பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா” திட்டத்தின் கீழ் வெளியான ரூ.5000 கோடி வருவாய் மட்டுமே இதுவரை கணக்கில் காட்டப்பட்டுள்ளது. இதற்கு 2 காரணங்கள் உள்ளன.
இந்தத் திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே மக்கள் தங்களிடமிருந்த ரொக்கத்தை பல்வேறு கணக்குகளில் டெபாசிட் செய்துள்ளனர். இரண்டாவது வரி அபராத விகிதம் பெரிய தொகையாக இருந்ததே” என்றார்.
ஆனால் நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பிரதமர் கரீப் கல்யான் யோஜனா திட்டத்துக்கு முன்னரே கூட கணக்கில் வராத பணத்தைக் கொண்டு வர வேறுசில திட்டங்களும் இருந்தன, எனவே இந்தத் திட்டத்தை மட்டும் தனியாக பார்க்க முடியாது என்றார்.
“பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா மட்டும் அந்த ஆண்டில் தனியான திட்டம் அல்ல. வருவாய் வெளிப்படுத்தும் திட்டம் இருந்துள்ளது, வரிகள் உண்டு என்று தெரிந்தே வங்கிகளில் டெபாசிட் செய்த தொகைகள் ஆகியவையும் அடங்கும், பிரதமர் கரீப் யோஜனா திட்டம் இதற்கு மேலானது.
மொத்தமாக கணக்கில் வராத பணம் வெளியே வந்தது என்பதைப் பார்த்தால் இந்த மூன்று விஷயங்களையும் இணைத்துப் பார்க்க வேண்டும். மேலும் பினாமிச் சட்டத்தின் கீழ் கறுப்புப் பணத்துக்கு எதிராக இன்னமும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்.
மேலும் கணக்கில் வராத தொகைகளை வெளியிடும் திட்டத்துக்கான 4 மாத கால அவகாசத்தில் ரூ.67,382 கோடி ரூபாய் சட்ட விரோத சொத்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றார் ஜேட்லி.