இந்தியா

ஜன்லோக்பால் மசோதாவை தடுக்க காங்கிரஸ், பாஜக கூட்டு சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

ஜன்லோக்பால் மசோதாவை தடுப்பதற்காக பாஜகவும் காங்கிரஸும் கூட்டு சேர்ந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷண் நிருபர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

மத்திய அரசின் முன் அனுமதி இல்லாமலேயே இந்த மசோதாவை சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரில் ஆம் ஆத்மி அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும். குடியரசுத் தலைவர், மத்திய அரசின் முன் அனுமதி இல்லாமல் ஜன்லோக்பால் மசோதாவை மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றுவது அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்று பாஜக, காங்கிரஸ் கூறுவதை ஏற்க முடியாது.

மாநில சட்டமன்றம் ஒன்றில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்ததும், குடியரசுத் தலைவரின் முன் அனுமதி பெறவில்லை என்பதால் அந்த சட்டம் செல்லுபடியாகாது என்று சொல்வதற்கு இடமில்லை. அரசமைப்புச் சட்டத்தின் 255வது பிரிவு இதற்கு வகை செய்கிறது.

இந்த மசோதாவை மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பினால் அங்கேயே அது முடங்கிவிடும். அதனால்தான் நாங்கள் முதலில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிடுகிறோம். டெல்லி அரசு முன் அனுமதி பெறவேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தில் இல்லை. எனவே குடியரசுத் தலைவர், மத்திய அரசின் முன் அனுமதி பெறாமல் சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்வது புறம்பானதாகாது.

இந்த மசோதாவை தாக்கல் செய்வதையும் அதன் மீது விவாதம் நடப்பதையும் எப்படியாவது தவிர்க்கவே பாஜகவும் காங்கிரஸும் விரும்புகின்றன. சுயேச்சையான லோக்பால் அமைந்தால் அந்த கட்சிகளின் தலைவர்கள் பலர் சிறைக்கு செல்ல வேண்டிவரும். மசோதா மீதான விவாதம், வாக்கெடுப்பின்போது அதை தடுப்பதற்காக அவர்கள் கைகோர்த்து செயல்படுவது அம்பலத்துக்கு வந்துவிடும் என்பதை அவர்கள் தெரிந்து கொண்டு செயல்படுகிறார்கள்.

தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து கிடைப்பதற்கு ஆதரவு தருவோம் என பாஜகவும் காங்கிரஸும் கூறுகின்றன. அதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை 2003 ஆகஸ்டில் ஒப்புதல் கொடுத்த போதிலும் அதை நிறைவேற்ற இருகட்சிகளுமே ஆர்வம் காட்டவில்லை.

டெல்லிக்கு என தனியாக சுதந்திரமான ஜன்லோக்பால் அமைவதை காங்கிரஸும் பாஜகவும் ஆதரிக்கின்றனவா என்பதே எங்கள் கேள்வி. அப்படியானால் அந்த மசோதாவை டெல்லி சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய ஆட்சேபம் எழுப்புவது ஏன்?

ஒருவேளை, ஜன்லோக்பால் மசோதா சட்டமன்றத்தில் தாக்கலாகி அதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தராமல் போனால் அடுத்த கட்ட நடவடிக்கையை பின்னர் முடிவு செய்வோம் என்றார் பிரசாந்த் பூஷண்.

SCROLL FOR NEXT