ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் விவகாரம் தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ், அதிமுக உறுப்பினர் களுக்கு இடையே வியாழக்கிழமை மோதல் ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர் சஞ்சய் நிருபம் அவையில் பேசியதாவது:
உச்ச நீதிமன்றம் 3 பேரை மட்டுமே விடுதலை செய்யலாம் என்று கூறியுள்ளது. இந்த உத்தரவில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இதில் முதல்வர் ஜெயலலிதா அரசியல் நடத்துகிறார். 3 பேரை மட்டுமே விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ள நிலையில் 7 பேரை விடுதலை செய்ய அவர் உத்தரவிட்டுள்ளார். குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அவர்கள் முழுமையாக அனுபவித்தே ஆக வேண்டும். தமிழக அரசின் உத்தரவு அநீதியானது.
(அவரது பேச்சுக்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவையின் மையப் பகுதியில் குவிந்த அவர்கள், சஞ்சய் நிருபமுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.)
இதனிடையே பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஐக்கிய ஜனதா தளம் உறுப்பினர்களும் மதவாத வன்முறை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றக் கோரி சமாஜ்வாதி உறுப்பினர்களும் அவையின் மையப் பகுதியில் கூடி கோஷமிட்டனர்.
இதையடுத்து பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோது அதிமுக உறுப்பினர்கள் தமிழக அரசின் முடிவை ஆதரித்து பேனர்கள் ஏந்தி நின்றனர்.