இந்தியா

‘தலாக்’, ‘நிக்காஹ் ஹலாலா’ முறைகளுக்கு எதிர்ப்பு: தேசிய மகளிர் ஆணையத்துக்கு முஸ்லிம் பெண்கள் அமைப்பு கடிதம்

ஆர்.ஷபிமுன்னா

மூன்று முறை ‘தலாக்’ கூறி இஸ்லாமியர்களால் செய்யப்படும் விவாகரத்து முறை மற்றும் ‘நிக்காஹ் ஹலாலா’ முறைக்கு தடை விதிக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை எழுந்துள்ளது. இதை வலியுறுத்தி தேசிய மகளிர் ஆணையத்துக்கு, பாரதிய முஸ்லிம் பெண்கள் போராட்டக் குழு கடிதம் எழுதியுள்ளது.

மணமான முஸ்லிம் பெண்களிடம் அவர்களுடைய கணவன்மார்கள் நேரில் வராமல் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் வழக்கம் உள்ளது. இதுபோல் நிக்காஹ் ஹலாலா என்பது விவாகரத்து பெற்ற தம்பதியர் மீண்டும் மணம்முடிக்கும் முறையாகும். இதில் பெண்கள் மட்டும் வேறு ஒருவரை மணம் முடித்து அவரிடம் இருந்து விவாகரத்து பெறவேண்டும். இதன் பிறகே அப்பெண் தனது முதல் கணவரை மணம் முடிக்க முடியும்.

பெண்களுக்கு மிகவும் பாதக மானதாகக் கருதப்படும் இந்த முறைகளுக்கு பல்வேறு பிரிவுகளின் முஸ்லிம் பெண்கள் இடையே பல ஆண்டுகளாக எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இத்துடன் நவீன காலத்துக்கு ஏற்றபடி, முஸ்லிம் கணவன்மார்கள் தங்கள் மனைவிகளிடம் சமூக இணையதளங்கள், தொலைபேசி, குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் போன்றவை மூலமாகவும் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்து விடுகின்றனர். இதனால், பாதிக்கப்பட்ட பெண்கள் மிக அதிகமாகக் காயப்படுவதுடன் அவர்களின் திருமண நிலை பாதுகாப்பு அற்றதாகவும் ஆகி வருகிறது. இதனால் ஒருதலைப்பட்சமான அந்த முறைக்கு தடை விதிக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தி பாரதிய முஸ்லிம் பெண்கள் போராட்டக்குழு என்ற அமைப்பினர், தேசிய மகளிர் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள் ளனர்.

இது குறித்து ‘தி இந்து’விடம் இந்த அமைப்பின் இணை நிறுவனரான பேராசிரியர் ஜக்கியா சுமன் கூறும்போது, “எங்கள் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் 92 சதவீத பெண்கள் தங்கள் வாழ்க்கை மற்றும் தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை இவை நாசமாக்குவதால் இவற்றுக்கு தடை விதிக்க விரும்புகின்றனர். இது ஒரு தவறான விவாகரத்து முறையாகும். இதுபோன்ற உடனடி விவாகரத்து பற்றிய குறிப்புகள் எதுவும் புனித குர்ஆனில் இல்லை. குர்ஆனில் குறிப்பிட்டுள்ளபடி ஒருமுறை தலாக் கூறிய பின் 90 நாள் இடைவெளி யில் பேச்சுவார்த்தை, மறுபரிசீலனை, தூது அனுப்புதல் ஆகியவற்றுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். முஸ்லிம் தனிச்சட்டத்தை பெண்களுக்கு பாரபட் சமாக இல்லாத வகையில் சீரமைக்க வேண்டும். இதில் பெண்களுக் காக குர் ஆனில் கூறப்பட்டுள்ள உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்காக, பல்வேறு வகையில் நடத்தி வரும் போராட்டங்களில் ஒன்றாக இந்த கடிதத்தை எழுதினோம்” என்றார்.

பதர் சையீத் வழக்கு தொடுப்பு

இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் முன்னாள் தலைவர் பதர் சையீத் மற்றும் பாரதிய முஸ்லிம் பெண்கள் போராட்டக்குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்துள்ளன. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், கடந்த ஒன்றரை மாதங்களில் சுமார் ஐம்பதாயிரம் கையெழுத்துகளும் பெறப்பட்டுள்ளன. இவை நாடு முழுவதிலும் உள்ள மாநில மகளிர் ஆணையத்திடம் போராட்டக்குழு சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதன் அடுத்த கட்டமாக மக்கள் பிரதிநிதிகளான எம்.பி., எம்எல்ஏ.க்களையும் சந்தித்து கோரிக்கை எழுப்ப உள்ளனர்.

SCROLL FOR NEXT