இந்தியா

டெல்லி போக்குவரத்து அலுவலகங்களில் பணிநேரம் நீட்டிப்பு

ஆர்.ஷபிமுன்னா

டெல்லி போக்குவரத்து அலுவலகங்களில் கடந்த திங்கள்கிழமை முதல் பணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவை வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 7 மணி முதல் மாலை 7 வரை செயல்படத் தொடங்கியுள்ளன.

தலைநகரமான டெல்லியில் மொத்தம் 12 போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இங்கு ஓட்டுநர் உரிமம் வழங்குதல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், புதிய வாகனங்களை புதிவு செய்தல் என பல்வேறு பணிகளுக்காக தினமும் ஏராளமானோர் வருகின்றனர். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. எனினும் வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் குறைந்தது 300 பேர்வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்பட்டது.

தொடர்ந்து பல ஆண்டுகளாக இதேநிலை நீடித்து வந்த நிலையில், இங்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சி அரசின் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அண்மையில் ஒரு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். டெல்லியின் அனைத்து போக்குவரத்து அலுவலகங்களும் வார விடுமுறையின்றி(அரசு விடுமுறை நாட்கள் தவிர) காலை 7 முதல் மாலை 7 மணி வரை செயல்படும் என அவர் கூறியுள்ளார். ஜூன் 10-ம் தேதி முதல் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இந்த நடைமுறை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த திங்கள்கிழமை முதல் போக்குவரத்து அலுவலகங்கள் கூடுதல் மணி நேரம் செயல்பட்டு வருகின்றன.

இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி போக்குவரத்து அலுவலக வட்டாரங்கள் கூறும்போது, “இங்குள்ள அனைத்து அலுவலகங்களிலும் அலுவலர்கள் பற்றாக்குறை உள்ளது. தற்போதுள்ள வார விடுமுறையின்றி செயல்பட்டாலும் கூட்டத்தை சமாளிப்பது கடினம். எனவே பணியிடங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். வாரத்தின் அனைத்து நாட்களிலும் வேலை என்பது முதன் முறையாகும். வேறு எந்த மாநிலத்திலும் இந்த நடைமுறை செயல்பாட்டில் இல்லை” என்று தெரிவித்தனர்.

டெல்லி போக்குவரத்து அலுவலகங்களில் இணையதளம் மூலமாகவும் நேரம் ஒதுக்கப்படுகிறது. நேரில் வருபவர்கள் வரிசையில் நின்று அலுவலக நேரத்துக்குள் தங்கள் பணியை முடிக்க வேண்டி இருக்கும். இதில் ஞாயிற்றுக்கிழமைகளில் இணையதளம் மூலம் நேரம் ஒதுக்கப்பட்டவர்கள் மட்டும் வருகை தரலாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அலுவலர்கள் பற்றாக்குறையை சமாளிக்க தற்காலிகப் பணியாளர்கள் பலரை கேஜ்ரிவால் அரசு நியமித்துள்ளது. நிரந்தரப் பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் (ஷிப்ட்) பணி வழங்கவும் மோட்டார் வாகன ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் தினமும் சுமார் ஆயிரம் புதிய கார்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதைவிட அதிக எண்ணிக்கையில் இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. யூனியன் பிரதேசமான டெல்லியில் வாகனப் பதிவுக் கட்டணம் மீதானகூடுதல் வரி குறைவு. எனவே டெல்லியை சுற்றியுள்ள உ.பி., பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஹரியாணா பகுதி மக்களும் இங்கு வாகனங்களை பதிவுசெய்ய வருகின்றனர்.

SCROLL FOR NEXT