இந்தியா

பிப். 10-ல் மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை- சீமாந்திர அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

என்.மகேஷ் குமார்

தெலங்கானா மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதை எதிர்த்து, வரும் 10-ம் தேதி சீமாந்திரா பகுதிகளில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என சீமாந்திரா அரசு ஊழியர் சங்க தலைவர் அசோக் பாபு ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

தெலங்கானா மசோதா ஆந்திர சட்டமன்றத்தில் நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்த மசோதாவை தற்போது நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யக் கூடாது என சீமாந்திரா மாவட்டங்களில் கடந்த புதன்கிழமை இரவு முதல் சுமார் 4 லட்சம் அரசு ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் வெள்ளிக்கிழமையும் தங்களது பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் பல அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின.

அரசு ஊழியர்கள் தர்ணா, ஆர்ப்பாட்டம், கண்டன ஊர்வலம், மனிதச் சங்கிலி உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனிடையே, அரசு ஊழியர் சங்க தலைவர் அசோக் பாபு தலைமையில் பல்வேறு அரசு துறை ஊழியர் சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது. கூட்டத்துக்குப் பிறகு அசோக் பாபு நிருபர்களிடம் கூறியதாவது:

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தெலங்கானா மசோதாவை தாக்கல் செய்யக் கூடாது. இதற்காக, மத்தியஅமைச்சர்கள், எம்.பிக்கள் கட்சி வேறுபாடின்றி போராட வேண்டும். தங்களது பதவிகளை ராஜினாமா செய்தாவது மாநில ஒற்றுமைக்காகப் போராடவேண்டும். இதனை வலியுறுத்தி சனிக்கிழமை சீமாந்திரா மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள், எம்.பிக்களின் வீடு, அலுவலகங்கள் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும். 11-ம் தேதி சீமாந்திராவில் உள்ள அனைத்து திரை அரங்குகளும் ஒரு நாள் மூடப்பட்டு காட்சிகள் ரத்து செய்யப்படும். 12-ம்தேதி தேசிய நெடுஞ்சாலைகளில் மறியல் போராட்டம் நடத்தப்படும். இதை தொடர்ந்து வரும் 17, 18 ஆகிய தேதிகளில் அரசு ஊழியர்கள், பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக் கணக்கானோர் டெல்லிக்கு சென்று அங்கு ஆர்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.

SCROLL FOR NEXT