வறட்சியால் பாதிக்கப்பட்ட மகா ராஷ்டிர மாநிலம் மராத்வாடா பகுதியில் மழையை பொழிவிக்க செயற்கை முறையிலான தொழில் நுட்பத்தை வழங்க சீனா முன் வந்துள்ளது.
சீனத் தலைநர் பெய்ஜிங், ஷாங்காய் மற்றும் அன்ஹுய் ஆகிய பகுதியில் இருந்து அண்மையில் மகாராஷ்டிர மாநிலத்துக்கு வந்த விஞ்ஞானிகள் குழு, மராத்வாடா பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக மழை இல்லாமல் வறட்சி நிலவி வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தது.
பேச்சுவார்த்தை
இதையடுத்து, தங்களது நாட்டில் மழை வராத பகுதியில் கிளவுட் சீடிங் (Cloud seeding) என்ற தொழில்நுட்பத்தை பயன் படுத்தி செயற்கை முறையில் மழையை பொழிவித்து வருவதை சீன விஞ்ஞானிகள் மகாராஷ்டிர அரசிடம் தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கு ஒப்புதல் தெரிவித்தால் அந்த தொழில் நுட்பம் மூலம் மராத்வாடாவில் மழை பொழிவுக்கான ஏற்பாடு களை செய்து தருவதாகவும் உறுதியளித்தனர். இதையடுத்து செயற்கை மழை தொடர்பாக இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இதில் அனுகூலமான முடிவுகள் எட்டப்பட்டால் அடுத்த ஆண்டு கோடையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தினருக்கு செயற்கை மழை தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்துவது என்ற பயிற்சி அளிக்கப்படும் என சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஷாங்காயின் உயரதிகாரியான ஹன் செங்கை சந்தித்து பேசினார். அப்போது மராத்வாடா பகுதியில் நிலவும் வறட்சி குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிகிறது. இதன் பிறகே செயற்கை மழை தொழில்நுட்பத்தை அளிக்க சீனா முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 1958 முதல் செயற்கை மழை தொழில்நுட்பத்தை சீனா பயன்படுத்தி வருகிறது என்றும், தற்போது ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் இந்த தொழில்நுட்பம் தான் மிகவும் மேம்பட்டதாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.