இந்தியா

திரைப்படத்தில் நடிக்கிறார் சித்தராமையா

இரா.வினோத்

கன்னடம், ஆங்கில மொழிகளில் தயாராகும் குழந்தைகளுக்கான திரைப்படத்தில், கர்நாடக முதல்வர் சித்தராமையா சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

கன்னட எழுத்தாளர் பி. லங்கேஷின் மகள் கவிதா லங்கேஷ், 'சம்மர் ஹாலிடேஸ்' என்ற குழந்தைகளுக்கான திரைப்படத்தை இயக்கி வருகிறார். அவரது மகள் ஈஷா (13) நடித்து வரும் இந்த திரைப்படம் கன்னடம் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் வெளியாக இருக்கிறது. இதில் கர்நாடக முதல்வர் சித்தராமையா சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து சித்தராமையா கூறும்போது,

‘‘கவிதா

லங்கேஷை குழந்தையில் இருந்தே எனக்கு தெரியும்.

‘சம்மர் ஹாலிடேஸ்' திரைப்படத்தின் கதையை சொல்லி நடிக்க வலியுறுத்தினார். எனக்கு நடிப்பெல்லாம் சரிப்பட்டு வராது என தொடர்ந்து மறுத்து வந்தேன்.

அண்மையில் மீண்டும் என்னை சந்தித்து, அந்த திரைப்படத்தின் முக்கியத்துவம் குறித்தும், எனது கதாபாத்திரத்தின் தன்மை குறித்தும் கவிதா விளக்கினார்.

‘சமூகத்தில் நல்ல கருத்துகளை வெளிப்படுத்தும் குழந்தைகள் திரைப்படத்தில் முதல்வரான நீங்கள் நடித்தால், மக்களுக்கு அந்த கருத்து எளிதில் போய்ச் சேரும்' என மீண்டும் வலியுறுத்தினார்.

எனவே அந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன். கோடை விடுமுறையில் குழந்தை கள் என்னை சந்திப்பதைப் போல காட்சிகள் உருவாக்கப்பட உள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் நடைபெறும்’’ என்றார்.

டி.வி. நிகழ்ச்சியில்

சித்தராமையா, கன்னட தனியார் தொலைக்காட்சியில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் முதல் முறையாக பங்கேற்றுள்ளார். நடிகர் ரமேஷ் அரவிந்த் தொகுத்து வழங்கும்

‘வீக் என்ட் வித் ரமேஷ்' நிகழ்ச்சியில் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி , மகன் யதிந்திரா மற்றும் உறவினர்கள் பலரும் இந்நிகழ்ச்சியில் முதல் முறையாக பங்கேற்கிறார்கள். இந்நிகழ்ச்சி வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT