அகிலேஷ் யாதவ்விடம் செய்தியாளர் ஒருவர் ஷிவ்பால் யாதவ் பற்றி கேள்வி எழுப்ப அவர் கடும் கோபமடைந்து காட்டமாகப் பேசியுள்ளார்.
கட்சித் தலைமைப் பொறுப்பை முலாயம் சிங் யாதவ்விடம் கொடுப்பது பற்றிய ஷிவ்பால் யாதவ் அறிக்கை குறித்து காவிச்சட்டை அணிந்த தொலைக்காட்சி நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதில் கடும் ஆத்திரமடைந்த அகிலேஷ் யாதவ், “இந்த நிருபர் இங்கு புதிது, இவரை முன்பு பார்த்ததில்லை. இவரது சட்டை கலரும் காவியாக உள்ளது. இவருக்கும் மற்ற பத்திரிகையாளருக்கும் கூறுகிறேன், அனைத்து கேள்விகளுக்கும் நான் மே மாதம் எந்த நாள் வேண்டுமானலும் பதில் கூறுகிறேன். ஆனால் அதன் பிறகு என் குடும்பம் பற்றி எந்தக் கேள்வியையும் நீங்கள் கேட்கக் கூடாது.
நாம் அரசியல் செய்வோம். நாடு சீரழிந்தால் நீங்களுமே (பத்திரிகையாளர்கள்) இங்கு இருக்கப் போவதில்லை. நாடு சீரழிவதற்குக் காரணமே உங்களைப் போன்ற பத்திரிகைக்காரர்கள்தான்” என்றார் காட்டமாக
ஆத்திரத்தினால் இவ்வாறு பேசிய அகிலேஷ் யாதவ் 1 மணிக்கு கூடியிருந்த சந்திப்பை நாளைக்கு ஒத்தி வைத்தார். மேலும் அந்த மூத்த பத்திரிகையாளரிடம் அகிலேஷ் பாதுகாவலர்கள் கட்சி அலுவலகத்தில் மோசமாக நடந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.