இந்தியா

பதவியேற்பு விழாவை எளிமையாக நடத்துகிறார் அமிர்ந்தர் சிங்; வீண் செலவுகளை தவிர்க்க முடிவு

பிடிஐ

பஞ்சாப் மாநில அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி வருவதை அடுத்து, தனது பதவியேற்பு விழாவை எளிமையாக நடத்த முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள அமரிந்தர் சிங் முடிவு செய்துள்ளார்.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிப் பெற்று 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. வரும் வியாழக்கிழமை பஞ்சாபின் புதிய முதல்வராக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான கேப்டன் அமரிந்தர் சிங் பதவியேற்றுக் கொள்கிறார்.

இந்நிலையில் மாநிலத்தின் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு பதவியேற்பு விழாவை எளிமையாக நடத்த அவர் முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அமரிந்தர் சிங் வெளியிட்ட அறிக்கையில், ‘‘வியாழக்கிழமை அன்று ஆளுநர் மாளிகையில் நடக்கும் பதவியேற்பு விழாவில் எவ்வித ஆடம்பரமும் இருக்காது. கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதில் இருந்து பஞ்சாபை மீட்டுக் கொண்டு வருவதில் அரசு முனைப்புடன் உள்ளது. இத்தகைய நெருக்கடியான சூழலில் ஒவ்வொரு ரூபாயும் சேமிக்கப்படுவது மிகவும் அவசியமானது’’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழாவுக்கான அழைப்பிதழ்களை குறைந்த செலவில் அச்சடித்துக் கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார். ஆதரவாளர்களும் சாலைகளில் பிரம்மாண்ட பதாகைகளை வைத்து வீண் செலவுகள் செய்வதை தவிர்க்கும்படியும் வலியுறுத்தியுள்ளார். தனது தலைமையிலான அரசு எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பஞ்சாபை மீண்டும் வளமான மாநிலமாக்க முடியும் என்றும் அமரிந்தர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT