திருநங்கைகள் பாதுகாப்பு மசோதா-2016 ஐ தாக்கல் செய்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு பரிந்துரைகள், திட்டங் களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மூன்றாம் பாலினத்தவர் (உரிமைகள் பாதுகாப்பு) மசோதா-2016-க்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா மூலம் ஏராளமான மூன்றாம் பாலினத்தவர்கள் பயன்பெறுவர். சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள அவர்களுக்கு சமூக, பொருளாதார, கல்வி மேம்பாட்டை இம்மசோதா உறுதி செய்யும். மூன்றாம் பாலினத்தவர் எதிர்கொள்ளும் சமூக புறக்கணிப்பு, கல்வி வசதிகள், மருத்துவ வசதிகள் இன்மை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இது தீர்வு காண்பதாக அமையும்.
திருநங்கைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை இம்மசோதா பொறுப்புடையமாக்குகிறது.
இம்மசோதா தவிர, நாட்டில் உள்ள 7,500 கி.மீ. கடலோரப் பாதைகள், 14,500 கி.மீ. நீர்வழிப் பாதைகள், சர்வதேச கடல்சார் வர்த்தக வழிகள் ஆகியவற்றை மேம்படுத்தும் "சாகர்மாலா' துறைமுக மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.1,000 கோடி தொடக்க பங்கு முதலீட்டுத் தொகையுடன் சாகர்மாலா மேம்பாட்டு நிறுவனம் (எஸ்டிசி) அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், பினாமி பரிவர்த் தனைகள் (தடுப்பு) சட்டத்திருத்த மசோதா 2015, உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் பிரதான் மந்திரி ஸ்வத்ய சுரக்ஷா திட்டத்தின் கீழ் ரூ.1,011 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தல், புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொள்முதல் செய்வதற்கு தேர்தல் ஆணையத்துக்கு ரூ.9,200 கோடி ஒதுக்கவும் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.