இந்தியா

ஆம் ஆத்மி மக்களவை வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியீடு

செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சி தனது முதல் வேட்பாளர் பட்டியலை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

டெல்லி- 2, உத்தரப் பிரதேசம்- 7, மகாராஷ்டிரம்- 6, ஹரியாணா, அருணாசலப் பிரதேசம், ஒடிசா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஓர் இடம் என மொத்தம் 20 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தொகுதியில் முக்கிய மத்திய அமைச்சர்களுக்கு எதிராக ஆம் ஆத்மி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அந்தக் கட்சியின் மூத்த தலைவர் குமார் விஸ்வாஸ் உத்தரப் பிரதேசம் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். இது ராகுல் காந்தியின் சொந்த தொகுதியாகும். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ராய் பரேலி தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபலின் டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் செய்தியாளர் ஆசுதோஷ் போட்டியிடுகிறார். வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மானின் சொந்த தொகுதியான உத்தரப் பிரதேசம் பருக்காபாதில் செய்தியாளர் முகுல் திரிபாதி போட்டியிடுகிறார்.

மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரியின் லூதியானா தொகுதியில் வழக்கறிஞர் எச்.எஸ். பூல்கா, சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கின் கோட்டையாகக் கருதப்படும் மெயின்புரி தொகுதியில் சமூக ஆர்வலர் ஹர்தேவ் சிங், ராஷ்ட்ரீய லோக் தளம் தலைவர் அஜித் சிங்கின் பாக்பத் தொகுதியில் விவசாயிகள் சங்கத் தலைவர் சோமேந்திரா டாக்கா, பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரியின் நாக்பூர் தொகுதியில் அஞ்சலி தமானியா, மத்திய அமைச்சர் மிலிந்த் தியோராவின் தெற்கு மும்பை தொகுதியில் ஆர்.பி.எஸ். வங்கி முன்னாள் தலைமை செயல் அதிகாரி மீரா சன்யால், வடமேற்கு மும்பை தொகுதியில் சமூக ஆர்வலர் மேதா பட்கர் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

SCROLL FOR NEXT