இந்தியா

மகளின் வெற்றிக்காக கிரிமினல் குடும்பத்தைச் சந்தித்தார் லாலு

செய்திப்பிரிவு

ராஷ்டிரிய ஜனதா தலைவர் லாலு பிரசாத் யாதவ் தனது மகள் மிசா பாரதியின் வெற்றிக்காக பிஹார் சிறையில் இருக்கும் கிரிமினலின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆதரவு கோரியுள்ளார்.

பிஹாரின் கிரிமினல்கள் பட்டியலில் அரசியல்வாதி ரீத்தாலால் யாதவ் பெயர் முதன்மையாக இடம் பெற்றுள்ளது. லாலு கட்சியைச் சேர்ந்த இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை ஆள்கடத்தல் வழக்குகள் உள்ளன. தற்போது இவர் பியூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் சில ஆண்டுகளாகவே ரீத்தாலாலிடம் இருந்து லாலு விலகி இருந்து வருகிறார்.

தற்போது லாலுவின் மகள் மிசா பாரதி பாடலிபுத்ரா மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் ரீத்தாலால் யாதவ் தனது மனைவியை சுயேச்சையாக களம் இறக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தனது மகள் மிசா பாரதியின் வெற்றியை பாதிக்கும் என்பதால் லாலு அதிர்ச்சியடைந்தார்.

இதற்காக சிறையில் உள்ள ரீத்தாலாலை சந்தித்தால் சிக்கல் ஏற்படும் என்பதால் தானாப்பூரின் காங்கோலில் வசிக்கும் ரீத்தாலாலின் குடும்பத்தினரை லாலு அண்மையில் சந்தித்துப் பேசினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த சந்திப்பினால், மிசா பாரதிக்கு வந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. லாலு கேட்டுக் கொண்டதன்பேரில் ரீத்தாலாலின் மனைவி போட்டியில் இருந்து விலகி மிசா பாரதிக்கு ஆதரவு அளிக்க ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது.

பாடலிபுத்ராவில் பாஜக சார்பில் லாலுவின் முன்னாள் சகாவான ராம்கிருபால் யாதவ் போட்டியிடுகிறார்.

இந்தப் பகுதி சட்டமன்றத் தொகுதியில் 2010-ல் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது. இதில் சுயேச்சையாக போட்டியிட்ட ரீத்தாலாலின் மனைவி, லாலு வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி இரண்டவது இடத்தை பெற்றார் என்பது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT