கால்நடைத் தீவன ஊழல் வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அவர் சிறையில் இருந்து திங்கள்கிழமை விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
“உச்ச நீதிமன்ற உத்தரவு நகல்கள், விசாரணை நீதிமன்றத்துக்கு இன்னும் வரவில்லை. இந்த நகல்கள் திங்கள்கிழமை வரும் என எதிர்பார்க்கிறோம். அவ்வாறு வந்துவிட்டால் ஜாமீன் பத்திரம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் அரை மணி நேரத்தில் முடிந்துவிடும்” என்று லாலுவின் வழக்கறிஞர் பிரபாத் குமார் நேற்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “தண்டனை பெற்ற வழக்கு தவிர, கால்நடைத் தீவன ஊழல் தொடர்பாக மற்ற 4 வழக்குகளில் லாலு, இதே காலத்தில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இந்த வழக்குகளில் ஏற்கெனவே ஜாமீன் பெற்று விட்டோம்” என்றார்.
“திங்கள்கிழமை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் வீட்டுக்கு செல்வதற்கு முன் லாலு கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்” என்று ஜார்க்கண்ட் மாநில கட்சி நிர்வாகி ஒருவர் கூறினார்.
கால்நடை தீவன ஊழல் தொடர்பாக லாலு மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சைபாசா கருவூலத்தில் இருந்து 37.7 கோடி முறைகேடாக பெற்றது தொடர்பான வழக்கு ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இதில் லாலு குற்றவாளி என கடந்த செப்டம்பர் 30ம் தேதி அறிவிக்கப்பட்டது. அவருக்கு அக்டோபர் 4ம் தேதி, 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்தபோது மற்ற 4 வழக்குகளில் விடியோ கான்பரன்சிங் மூலம் சிபிஐ நீதிமன்றங்களில் ஆஜராகி வந்தார்.